Published : 21 Dec 2021 09:00 AM
Last Updated : 21 Dec 2021 09:00 AM
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை காலைசுப்ரபாதம் முதல் இரவு ஏகாந்தசேவை வரை தரிசனம் செய்யஒருவருக்கு ரூ.1.5 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பம்பா ஷேத்ரத்தின்கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் திருப்பதியில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
காலை சுப்ரபாத சேவை முதல்,அர்ச்சனை, தோமாலை சேவை, கல்யாண உற்சவம் என தொடர்சியாக சூரிய உதயம் முதல் ஏகாந்த சேவை வரை திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யும் அனைத்து சேவைகளையும் கண்டு களிக்க வார நாட்களில் ஒருவருக்கு ரூ.1 கோடி எனவும், இதுவே அபிஷேகம் நடைபெறும் வெள்ளிக்கிழமை மட்டும் ஒருவருக்கு ரூ.1.5 கோடி எனவும் திருப்பதி தேவஸ்தானம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த டிக்கெட்டை பெறும் பக்தர்கள், தங்கள் வாழ்நாளில் 25 ஆண்டுகள் வரை ஒவ்வொரு ஆண்டும் உதய,அஸ்தமன சேவையில் பங்கேற்கலாம். மொத்தம் உள்ள 531 டிக்கெட்கள் விரைவில் ஆன்லைன் மூலம் விற்கப்படும் எனவும், இதன்மூலம் வரும் கட்டண பணத்தில் திருப்பதியில் ரூ.600 கோடி செலவில் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இப்படி செய்தால், சாமானியபக்தர்கள் எவ்வாறு சுவாமியைதரிசிக்க இயலும்? ஏழுமலையானை, பணக்காரர்களின் கடவுளாக தேவஸ்தான அதிகாரிகள் மாற்றி விடுவார்களோ என அஞ்சுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இப்போது இந்த உதய அஸ்தமன டிக்கெட்டின் விலை ரூ.10 லட்சத்தை தொடும் வகையில் உள்ளது. இதனையே தற்போது ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1.5 கோடி என தேவஸ்தானம் நிர்ணயம் செய்துள்ளது. நாட்டில் மட்டுமல்லாது உலகில் எந்த இடத்திலாவது இவ்வளவு கட்டணம் உள்ள கோயில் உள்ளதா? இதற்கு யார் அனுமதி வழங்கியது? மருத்துவமனை கட்டுவதுஎன்பது ஒரு அரசின் கடமையாகும். இதற்கு திருப்பதி தேவஸ்தானம் ஏன் கோடி கணக்கில் பக்தர்களிடமிருந்து தரிசனம் எனும் பெயரில் திணிக்க வேண்டும்? என்றும் இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமிகள், காங்கிரஸார், இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...