Published : 21 Dec 2021 07:46 AM
Last Updated : 21 Dec 2021 07:46 AM

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகிறது: மசோதா சொல்வது என்ன?

தேர்தல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று மக்களவையின் மையப் பகுதியில் கூடி அமளியில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே தேர்தல் சட்டத் திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதியை கணக்கில்கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுகின்றனர். ஜனவரி 2-ம் தேதிக்கு பிறகு 18 வயது பூர்த்தியாகும் இளம் தலைமுறையினர், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க ஓராண்டு காத்திருக்கும் நிலை உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஓராண்டில் 4 முறை புதிய வாக்காளர்களை சேர்க்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

அதேபோல, போலி வாக்காளர்களை களையவும், கள்ள ஓட்டு போடுவதை தடுக்கவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது. ஆனால், ஆதார் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.

அதனால், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சட்ட அமைச்சகத்திடம் தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந் துரைகளுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜு பேசும்போது, ‘‘தேர்தல் நடைமுறையை தூய்மைப்படுத்தும் வகையில் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சக நிலைக் குழு அளித்த பரிந்துரைகளே இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன’’ என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

தேர்தல் சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக புதிய மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது. இது மக்களின் அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்த மசோதாவை நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் பேசும்போது, ‘‘புட்டசாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறி புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் செயலாளர், தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடுகிறது’’ என்று குற்றம்சாட்டினார்.

பகுஜன் சமாஜ் எம்.பி. ரித்திஷ் பாண்டே பேசும்போது, ‘‘மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக தேர்தல் சட்டத் திருத்த மசோதா வரையறுக்கப்பட் டுள்ளது. இந்த மசோதாவை முழுமையாக எதிர்க்கிறோம்’’ என்றார்.

அமைச்சர் விளக்கம்

இதைத் தொடர்ந்து அமைச்சர் கிரண் ரிஜுஜு அளித்த விளக்கத்தில் கூறியதாவது:

எதிர்க்கட்சி எம்.பி.க்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தவறாக அர்த்தம் கற்பித்து வாதிடுகின்றனர். தேர்தல் சட்டத் திருத்த மசோதா குறித்து அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. தேர்தல் நடைமுறையை தூய்மைப்படுத்தும் வகையிலும் வாக்காளர் சேர்க்கை நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையிலும் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது விருப்பத்தின்பேரில் நடக்கிறது. இந்த புதிய சட்ட மசோதா மூலம், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இதனால் போலி வாக்காளர்கள் களையப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக மக்களவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் மக்களவை கூடியபோது, அவையை நடத்திய கிரிட் பிரேம்ஜிபாய் சோலங்கி, மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தினார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளிக்கு நடுவே குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

ஆணையத்துக்கு அதிகாரம்

தேர்தல் நேரத்தில் பள்ளி, கல்லூரி களை வாக்குச்சாவடி அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது. அவ்வாறு பயன்படுத்தும்போது பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் எதிர்ப்புகள் எழுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் சீர்திருத்த மசோதா அமைந்துள்ளது. புதிய மசோதா மூலம் எந்தவொரு வளாகத்தையும் தேர்தல் நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

மேலும், புதிய மசோதாவில் பாலின சமத்துவமும் நிலை நாட்டப்படுகிறது. தற்போதைய சட்ட விதிகளின்படி, ராணுவ வீரர் ஒருவர் பணி தொடர்பாக வெளியூர் சென்றிருந்தால் அவருக்கு பதிலாக அவரது மனைவி தேர்தலில் வாக்களிக்க முடியும். ஆனால், ராணுவத்தில் பணியாற்றும் பெண்ணின் கணவர் வாக்களிக்க முடியாது. தற்போது, ராணுவ பெண் அலுவலரின் கணவரும் வாக்களிக்க புதிய சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகு அமலுக்கு வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x