Published : 21 Dec 2021 08:44 AM
Last Updated : 21 Dec 2021 08:44 AM
புதுடெல்லி: தமிழகத்தில் ஜனவரி மாதம் 12-ம்தேதி 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்தவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நடை பெறும் இவ்விழாவுக்கு முன்பாக சென்னையில் நடக்கும் விழாவில், 16 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கான 3 கட்டிடம் திறக்கப்படஉள்ளது. இந்த கட்டிடம் செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல் லூரில் ரூ.24.65 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ’இந்து தமிழ்’ நாளிதழிடம் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் புதிய கட்டிடத்தில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த் தாய், திருவள்ளுவர் மற்றும் தொல்காப்பியர் சிலைகள் அமைந்துள்ளன. ஏழரை அடி உயரங்களில் பளிங்குக் கல்லால் ஆன சிலைகளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும் சம்ஸ்கிருதம், இந்தி, மலையாளம், உட்பட 11 மொழிகளில் இந்நிறுவனம் சார்பில் திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட உள்ளன’’ என்றனர்.
திருக்குறள், திருவள்ளுவரை பற்றி பிரதமர் மோடி அடிக்கடி பேசி வருகிறார். திருவள்ளுவர் தினம் வருவதை ஒட்டியும், திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை தானே வெளியிட பிரதமர் மோடி விரும்புவதாக தெரிகிறது. இவருடன் 2 விழாக்களிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதன்மூலம், இருவரும் முதல் முறையாக ஒரே மேடைகளில் உரையாற்ற உள்ளனர்.
பாஜக.வின் எதிர்க்கட்சியாக தமிழகத்தில் திமுக அரசு இருந்தாலும், மத்திய அரசுடன் நல்லுறவு கொள்ளும் அவசியம் இருந்து வருகிறது. இதற்காக நாடாளுமன்றத்திலும் திமுக.வின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இக்கட்சியின் எம்.பி.க்கள் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூடத்தில் அவ்வளவாக எதிர்ப்பு காட்டாதது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் பாஜக - திமுக இடையே நல்லுறவு உருவாகி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இது பாஜக கூட்டணியில் இடம்பெறும் அளவுக்கு செல்லாது எனினும், நல்லுறவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், தமிழக விழாக்களில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் நேரம் செலவிட இருப்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT