Published : 20 Dec 2021 03:58 PM
Last Updated : 20 Dec 2021 03:58 PM
புதுடெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேர்தல் சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் ஆணையத்துக்கு அதிக அதிகாரம் மற்றும் போலி வாக்காளர்களைத் தடுத்தல், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையை இணைத்தல் ஆகியவற்றை பிரதானமாக வைத்து தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்த தேர்தல் சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து இன்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்
பான் கார்டு - ஆதார் கார்டு இணைப்பு போல், ஆதார் கார்டையும், வாக்காளர் அடையாள அட்டையையும் இணைப்பது முதல் சீர்திருத்தமாகும். இந்த திருத்தத்தைக் கட்டாயமாக்காமல் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் போலி வாக்காளர்கள் வருவதைத் தடுக்க முடியும், தேர்தல் நடைமுறை வலுப்படுத்தப்படும்.
2-வதாக, ஆண்டுக்கு ஒருமுறைதான் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைமுறை இருந்து வருகிறது. இதை ஆண்டுக்கு 4 முறை செயல்படுத்தத் திட்டமிட்பட்டுள்ளது.
3-வதாக பாலின சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்து திருத்தம் செய்யப்படுகிறது. அதாவது, பாதுகாப்புப் பணியில் கணவர் இருக்கும்பட்சத்தில் அவரால் நேரடியாக சொந்த இடத்துக்கு வந்து வாக்களிக்க முடியாத சூழலில், அவருக்கு பதிலாக அவரின் மனைவி சர்வீஸ் வாக்கைச் செலுத்த நடைமுறையில் அனுமதியிருக்கிறது.
ஆனால், மனைவி இதுபோன்ற அரசுப் பணியில் இருந்தால், அவர் வாக்களிக்க முடியாத சூழலில் சர்வீஸ் வாக்கை கணவர் வாக்களிக்க இடமில்லை. ஆனால், இந்த திருத்தம் மூலம் கணவரும் வாக்களிக்க வகை செய்யும் திருத்தம் செய்யப்பட உள்ளது.
4-வதாக, தேர்தல் ஆணையம் எந்த இடத்திலும் தேர்தல் நடத்த அனுமதிக்கப்படுகிறது. சில இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள், முக்கிய நிறுவனங்களைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துவதில் எதிர்ப்புகள் இருப்பதால் எந்த இடத்திலும் தேர்தல் நடத்தலாம் எனக் கொண்டுவரப்படுகிறது.
இந்த மசோதாவை அறிமுகம் செய்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில் “ இந்த மசோதாவின் மூலம் போலியாக வாக்களிப்பவர்களைத் தடுக்க முடியும். தேசத்தின் தேர்தல் நடைமுறை நம்பகத்தன்மையுடையதாக மாறும்” எனத் தெரிவித்தார்
ஆனல், இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த “ அடிப்படை உரிமையை மீறும் வகையில் சட்டம் உள்ளது. தேர்தல் அதிகாரி ஒருவர் மக்களின் ஆதார் எண்ணைப் பெற்று அவரின் அடையாளத்தை அறிந்து கொள்ளலாம்’’ என இருக்கிறது என்று கூச்சலிட்டனர்.
மக்களவையை நடத்திய ராஜேந்திர அகர்வால் இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக அறிவித்தார். ஆனால், தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அப்போது காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “இந்த மசோதாவுக்கு இப்போது அவசியம் என்ன. இந்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவுக்குப் பரிந்துரை செய்து ஆய்வு செய்தபின் அறிமுகம் செய்யலாம்” எனத் தெரிவித்தார்
வாக்கு வங்கி அரசியலைக் குறிவைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசுகையில், “சட்டத்துறை அமைச்சர் ஜனநாயகத்தைக் கொலை செய்கிறார். இந்த மசோதாவுக்கு என்ன அவசரம்” எனக் கேள்வி எழுப்பினார். ஆனால், அவையை நாளை வரை அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.
வீடியோ வடிவில் காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT