Published : 20 Dec 2021 01:16 PM
Last Updated : 20 Dec 2021 01:16 PM
புனே: 2019-ம் ஆண்டு மகாராஷ்டிர தேர்தல் முடிந்தபின் மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ்தான் வரவேண்டும் என்பதை பிரதமர் மோடியும், நானும் தெளிவாகக் கூறியிருந்தோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிவசேனா கட்சியைக் கடுமையாகச் சாடினார்.
புனேயில் நேற்று பாஜக சார்பில் நடந்த கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ''2019-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி முன்னிலையில் நான் இருந்தேன். அப்போது சிவசேனா கட்சி எங்களிடம் மாநிலத் தேர்தலை தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் சந்திப்போம், முதல்வராக அவரே மீண்டும் வரட்டும் எனக் கூறினார்கள். ஆனால், உத்தவ் தாக்கரே முதல்வராக வர வேண்டும் என்பதற்காக எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு அவர் முதல்வராகிவிட்டார்.
நான் சிவசேனா கட்சியுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தையும் நடத்தினேன். அதை மீண்டும் இன்று வலியுறத்த விரும்புகிறேன். தேர்தலை தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடத்தலாம், முதல்வராக பாஜக சார்பில் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்கள் வரலாம் என்று சிவசேனா தெரிவித்தது.
ஆனால், அதிகாரம், ஆட்சிக்காக சிவசேனா கட்சி இந்துத்துவாவை சமரசம் செய்துள்ளது. இரு தலைமுறைகளாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போராடிவிட்டு அவர்களுடன் சிவசேனா கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் பொய் கூறுவதாக எங்களைக் குற்றம் சாட்டுகிறார்கள்.
நான் பொய் கூறுவதாகவே இருக்கட்டும். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் மீது பதாதைகள் வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா. பதாகைகளில் உங்களின் புகைப்படத்தையும், மோடியின் புகைப்படத்தையும் பாருங்கள். உங்கள் புகைப்படம் மோடியின் புகைப்படத்தில் நான்கில் ஒரு பங்குதான் இருக்கும். ஆனால், மோடியின் பெயரை நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள்
மக்களுக்கு நேரடியாக மானியத்தை அளிக்கும் டிபிடி திட்டத்தின்படி, மாநிலத்தில் ஆளும் மகாவிகாஸ் அகாதி அரசில் காங்கிரஸ் கட்சி (d) டீலர், சிவசேனா (b) புரோக்கர், (T) தேசியவாத காங்கிரஸ் டிரான்ஸ்பர்.
சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று கூறிய பாலகங்காதர திலகர் பிறந்த மண் இந்த புனே நகரம். ஆனால், சிவசேனா கட்சி அதிகாரம், ஆட்சிதான் எனது பிறப்புரிமை, அதை எப்படியாவது அடைவேன் என்று கூறுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போலியோ தடுப்பூசி உள்ளிட்ட பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் மக்களைச் சென்றடையவில்லை. ஆனால், இப்போது பாஜக ஆட்சியில், பிரதமர் மோடியின் தலைமையில் கரோனா தடுப்பூசி அனைத்து மக்களையும் சென்றடைகிறது''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2014-19 வரை பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஆனால், 2019-ம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டாகத் தேர்தலைச் சந்தித்துவிட்டு, முதல்வர் பதவியைப் பங்கீடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. கூட்டணியை உடைத்தன. சிவசேனாவுக்கு முதல்வர் பதவி கிடையாது என பாஜக மறுத்தது. இதனால் சிவசேனா கட்சி, மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இணைத்துக் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்தச் சம்பவத்தில் முதல்வர் பதவியைத் தராத சிவசேனா கட்சியைத்தான் அமித் ஷா சுட்டிக்காட்டி சாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT