Published : 19 Dec 2021 03:54 PM
Last Updated : 19 Dec 2021 03:54 PM
கொல்கத்தா: ஜாவத் புயல் காரணமாக பருவம்தப்பிய மழையால் பயிர்கள் நாசம் ஏற்பட்டதை அடுத்து மேற்குவங்கத்தில் 3 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மேற்கு வங்கத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் மூன்று விவசாயிகள் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சில வாரங்களுக்கு முன்பாக (டிசம்பர் முதல்வாரத்தில்) வடகிழக்கு பருவக் காற்று காரணமாக வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. பருவம் தப்பிய கனமழையின் கடும் பாதிப்பில் மேற்கு வங்கத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் புர்பா பர்தமான் மாவட்டத்திலும் ஏராளமான விளைநிலங்கள் வெள்ளாக்காடாக மாறின.
புர்பா பர்தமான் மாவட்டத்தைச் சேர்ந்த ரெய்னா I வட்டாரத்தில் உள்ள உள்ள தேபிபூர் மற்றும் பந்திர் கிராமங்களில் சனிக்கிழமை இரண்டு விவசாயிகள் தங்கள் வீடுகளில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். கல்னா II வட்டாரத்தில் உள்ள பிருஹா கிராமத்தில் வெள்ளிக்கிழமை மற்றொரு விவசாயி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் குறிப்பிட்ட வட்டாரங்களின் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸாரிடம் ''ஜவாத் சூறாவளியால் ஏற்பட்ட அகால மழையால் உருளைக்கிழங்கு மற்றும் நெல் பயிர்கள் நாசமடைந்ததால் குடும்பத்தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்'' என்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் கூறினர்.
விவசாயிகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பர்தமான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பயிர்கள் மூழ்கியது காரணம் அல்ல: அதிகாரிகள் கருத்து
பயிர்கள் மூழ்கியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விவசாயகளின் குடும்பத்தினர் கூறியதை அதிகாரிகள் மறுத்தனர்.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சிங்லா தெரிவித்தார்.
ரெய்னா முதல் பிளாக் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) சௌமென் பானிக் கூறுகையில், ''முதற்கட்ட விசாரணையில், பயிர் இழப்பு காரணமாக தற்கொலை இல்லை என்று கண்டறியப்பட்டது, மேலும் இந்த சம்பவங்கள் குறித்து மேலும் விசாரிக்க காவல்துறை மற்றும் விவசாயத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.'' என்றார்.
இதுகுறித்து மாநில அரசின் விவசாய ஆலோசகர் பிரதீப் மஜூம்தார் கூறுகையில், ''ஒரு வாரத்திற்கு முன்பு கிரிஷக் பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்கச் செய்துள்ளோம். அப்படியிருக்க விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை'' என்றார்.
ரெய்னா தொகுதி எம்எல்ஏ ஷம்பா தாராவும் ''இது பயிர் மூழ்கியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இல்லை'' என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment