இந்துத்துவாவாதி கங்கையில் குளிப்பார்; ஓர் உண்மையான இந்து மக்களுடன் சங்கமிப்பார்: ராகுல் காந்தி சாடல்

இந்துத்துவாவாதி கங்கையில் குளிப்பார்; ஓர் உண்மையான இந்து மக்களுடன் சங்கமிப்பார்: ராகுல் காந்தி சாடல்
Updated on
1 min read

இந்துத்துவாவாதி கங்கையில் மட்டுமே குளிப்பார். ஆனால் உண்மையான இந்து மக்களுடன் சங்கமிப்பார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இதனால், அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

உ.பி.,யில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர் இது நாட்டின் வளர்ச்சிக்காக என்று பேசுகிறார். பிரதமரின் நடவடிக்கைகள் தேர்தல் ஆதாயத்துக்கானது என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

இன்று, கங்கா சாலைத்திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்த நிலையில் மறுபுறம் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் இன்று பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

அப்போது பேசிய அவர், "ஒருபுறம் இந்து, மறுபுறம் இந்துத்துவாவாதி. உண்மையும், அன்பும், அஹிம்சையும் ஒருபுறம். பொய்மையும், வெறுப்பும், வன்முறையும் மறுபுறம் நிற்கின்றன.

இந்துத்துவாவாதி கங்கையில் மட்டும் தான் குளிப்பார். ஆனால், இந்து கோடிக்கான மக்களுடன் சங்கமிப்பார்.

நரேந்திர மோடி நான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்கிராறே. அவர் எப்போது உண்மையைப் பாதுகாத்துள்ளார். அப்படியென்றால் அவர் இந்துவா? இந்துத்துவாவாதியா? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

நாட்டில் மதம் பற்றிய அதுவும் இந்து மதம் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது நடைபெறும் போட்டி இந்துக்கும், இந்துத்துவாவாதிக்கும் எதிரானது. ஒருபுறம் அன்பைப் பரப்பும் இந்துக்களும், இன்னொரு புறம் பதவியைப் பறிக்க வெறுப்பை பரப்பும் இந்துத்துவாவாதிகளும் இருக்கின்றனர்.

ஓர் இந்து தனது ஆயுள் முழுவதும் மெய்வழியில் நடக்கிறார். உண்மைக்காக போராடுபவராக இருக்கிறார். ஓர் இந்து தனது சவால்களை எதிர்கொள்கிறார். இந்துத்துவாவாதியோ அரசியல் செய்கிறார். பொய்களைப் பரப்புகிறார். எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறார். ஓர் இந்துத்துவாவாதி நாதுராம் கோட்சே போல் இருப்பார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளால் ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். பணமதிப்பிழப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கரோனா காலத்தில் போதிய உதவிகளை செய்யாதது என அடுக்கடுக்கான தவறுகளை பிரதமர் மோடி செய்துள்ளார்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in