Published : 17 Dec 2021 09:49 PM
Last Updated : 17 Dec 2021 09:49 PM
கர்நாடகா சட்டப்பேரவையில் எம்எல்ஏ கேஆர் ரமேஷ் குமார் பாலியல் பலாத்காரம் பற்றி பேசிய விஷயத்தை வண்மையாகக் கண்டிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடாகா எம்எல்ஏ ரமேஷ்குமார் பேச்சை முழுமனதுடன் கண்டிக்கிறேன். இப்படியான வார்த்தைகள் ஒருவரால் எப்படிப் பேச முடிந்தது என்பதே விவரிக்க இயலாதது. அந்தப் பேச்சுக்கு அவரை யாரும் பாதுகாக்க மாட்டார்கள். பாலியல் பலாத்காரம் ஒரு கொடுங் குற்றம். அவ்வளவே. என்று முற்றுப்புள்ளி வைத்துப் பதிவிட்டுள்ளார்.
I wholeheartedly condemn the statement made earlier today by Sri. K.R.Ramesh Kumar. It is inexplicable how anyone can ever utter such words, they are indefensible. Rape is a heinous crime. Full stop.
கர்நாடக சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று (வியாழக்கிழமை) விவசாயிகள் பிரச்சினை எழுப்பப்பட்டது. விவசாயிகள் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது பேசிய சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, "அனைத்து உறுப்பினர்களும் பேச நேரம் ஒதுக்கினால் எப்படி அலுவல்களை மேற்கொள்வது. நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் ஆம் என்று தான் சொல்வேன். இப்போது இங்கு இருக்கும் நிலைமை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இதை நான் சமாளிக்க முடியாது. அதனால் அமைதியாக நடப்பதை அனுபவிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன். எனது அக்கறை எல்லாம் அவை தடைபடாமல் அலுவல் நடக்க வேண்டும் என்பதே" என்றார்.
அதற்குப் பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ கேஆர் ரமேஷ் குமார், "ஒரு சொலவடை இருக்கிறது. பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் அமைதியாகப் படுத்து அனுபவிக்க வேண்டும் என்று. நீங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறீர்கள் " என்று சபாநாயகரைப் பார்த்துக் கூறினார்.
மன்னிப்பு கோரிய எம்எல்ஏ:
தனது கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் இது குறித்து எம்எல்ஏ கேஆர் ரமேஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். நேற்றிரவு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் பேச்சுவாக்கில் தான் அப்படிச் சொல்லிவிட்டேனே தவிர கொடுங்குற்றமான பாலியல் பலாத்காரத்தை அங்கீகரிக்கவில்லை. இனி அவையில் எனது வார்த்தைகளைக் கவனமாகத் தேர்வு செய்வேன்" என்று கூறினார்.
இந்நிலையில், எம்எல்ஏ கேஆர் ரமேஷ் குமார் பாலியல் பலாத்காரம் பற்றி பேசிய விஷயத்தை வண்மையாகக் கண்டிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக கடும் தாக்கு:
காங்கிரஸ் எம்எல்ஏ கேஆர் ரமேஷ்குமார் பேச்சு குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இராணி கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். உத்தரப்பிரதேச தேர்தலுக்காக பிரியங்கா காந்தி மகளிர் நலத் திட்டங்களை ஒருங்கிணைப்பதெல்லாம் அப்புறம் நடக்கட்டும். முதலில் பெண்ணின் மாண்பை இழிவுபடுத்திய கேஆர் ரமேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யட்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT