Published : 17 Dec 2021 05:35 PM
Last Updated : 17 Dec 2021 05:35 PM

இந்தியாவில் 100-ஐத் தாண்டியது ஒமைக்ரான் தொற்று: மகாராஷ்டிராவில் 32 பேர் பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் 32 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 77 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்று உறுதியானது. தற்போது மகாராஷ்டிரா 32, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா, தெலங்கானா, கேரளா, குஜராத்தில் தலா 8, ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. யூனியன் பிரதேசங்கள் உள்பட 11 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நிலவரம்:

பிரிட்டனில் ஒரே நாளில் 11,708 பேருக்கும், டென்மார்க்கில் 9,009 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் பெல்ஜியத்தில் சராசரியாக அன்றாடம் 500 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி வருகிறது. உலக அளவில் பிரிட்டன், டென்மார்க், நார்வே, தென் ஆப்பிரிக்க நாடுகளில்தான் ஒமைக்ரான் பரவல் அதி வேகமாக உள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி, ஒமைக்ரான் பரவல் டெல்டா திரிபின் தாக்கம் குறைவாக இருந்த தென் ஆப்பிரிக்காவிலும் அதிகமாகப் பரவுகிறது. டெல்டா தாக்கம் அதிகமாக இருந்த பிரிட்டனிலும் அதிவேகமாகப் பரவுகிறது எனத் தெரிவித்துள்ளது.

முகக்கவசம், சமூக இடைவெளி முக்கியம்:

"ஒமைக்ரான் வைரஸால் சர்வதேச கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். இப்போதைக்கு உலக அளவில் கிடைக்கும் தரவுகள் நோய் எதிர்ப்பாற்றலை உடைத்துப் பரவுவது உறுதியாகியுள்ளது. தடுப்பூசி ஆற்றலை ஒமைக்ரான் மீறுகிறதா என்று இன்னும் ஆதாரங்கள் வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் ஆகியன அவசியம். தடுப்பூசி மட்டுமே இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முழுமை செய்துவிடாது என்ற உலக சுகாதார அமைப்பின் கூற்றை உணர்ந்து நடக்க வேண்டும்" என்று லாவ் அகர்வால் கூறினார்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்:

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர், தேவையற்ற பயணங்கள், பெருங்கூட்டங்கள், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது என்று கூறினார். எந்தெந்த மாவட்டங்களில் பாசிடிவிட்டி ரேட் 5%க்கும் மேல் இருக்கிறதோ அந்த மாவட்டங்களில் எல்லாம் சில கட்டுப்பாடுகளை விதிப்பது நலம். குறைந்தது இரண்டு வாரங்களாவது இந்த நடவடிக்கையைக் கடைப்பிடிக்கலாம் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x