Published : 17 Dec 2021 03:22 PM
Last Updated : 17 Dec 2021 03:22 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியதை நினைத்து பாஜகவினர் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் துர்கா பூஜையும் ஒன்று. இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், கொல்கத்தாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை அங்கீகரிக்கும் விதத்தில் கொல்கத்தாவின் துர்கா பூஜைக்கு யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கி கடந்த இரு நாட்களுக்கு முன் அறிவித்தது. இதற்கு பிரதமர் மோடி, முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் மம்தா பானர்ஜி துர்கா பூஜைக்கு அரசு சார்பில் செலவிட்டதை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். திருப்திப்படுத்தும் அரசியல் செய்யும் மம்தா என்றும், இந்துக்களின் துர்கா பூஜையே மம்தாவால்தான் பாதிக்கப்பட்டது என்றும் பாஜகவினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் கொல்கத்தா நகராட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பான்ஜி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''துர்கா பூஜையை நான் நடத்தவிடமாட்டேன், திரிணமூல் காங்கிரஸ் அரசு நடத்தவிடாது என்று கூறிய பாஜகவினர் இப்போது வெட்கித் தலைகுனிய வேண்டும். ஏனென்றால், துர்கா பூஜைக்கு யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. இந்த சாதனையை அடுத்த ஆண்டு துர்கா பூஜையின்போது கொண்டாடுவோம்.
எங்களுக்கு எதிராக சிலர் பொய்களைப் பரப்பினார்கள். நாங்கள் துர்கா பூஜையைக் கொண்டாட விடமாட்டோம் என்று பொய்களைப் பரப்பினார்கள். அவர்களின் பொய் வெளியே வந்துவிட்டது. அவர்களின் பேச்சுக்கும், செயலுக்கும் இப்போது வெட்கப்பட வேண்டும். நான் சாதித்த விஷயங்கள் குறித்துப் பெருமைப்படுகிறேன்.
நான் நேற்று சாதித்த விஷயங்களைத் தொடர்ந்து நீண்ட காலத்துக்குக் கொண்டுசெல்ல விரும்புகிறேன். மேற்கு வங்கத்தை முதல் மாநிலமாக மாற்ற முயல்வேன், என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். பாஜக என் மீது அவதூறு பரப்பியது. இப்போது யுனெஸ்கோவை அவதூறு செய்ய முடியுமா, பாரம்பரிய அந்தஸ்து கொடுத்தது குறித்து கேள்வி கேட்பார்களா, அதற்கான துணிச்சல் இருக்கிறதா? யுனெஸ்கோவுக்கும், ஐ.நா.வுக்கும் நன்றி''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT