Published : 30 Mar 2016 09:45 AM
Last Updated : 30 Mar 2016 09:45 AM
மேற்குவங்கத்தின் 294 தொகுதிகளுக்கும் ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளுக் கான பிரச்சாரம் வரும் சனிக்கிழமையுடன் முடிவடை கிறது. இத்தொகுதிகளில் பிரச்சாரம் சூடுபிடித் துள்ளது. அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் சுவர் விளம்பரம், பேனர்கள் கட்டுவது ஆகிய பணிகளை அரசியல் கட்சியினர் முடுக்கி விட்டுள்ளனர்.
முஸ்லிம் வாக்கு வங்கி
மேற்குவங்கத்தில் 27 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்கள் 125 சட்டசபை தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்பதால், முஸ்லிம் வாக்கு வங்கியை குறிவைத்து இரண்டு அணிகளுமே பிரச்சாரம் செய்து வருகின்றன.
குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகால திரிணமூல் ஆட்சியில் நடந்த வன்முறை சம்பவங்கள், படு கொலைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு எதிர்க் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந் நிலையில் திரிணமூல் கட்சி தலைவர்கள் சிலர் பகிரங்கமாக பணம் வாங்கியது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு, கரக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது கூட திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வீடியோ காட்சிகளை சுட்டிக் காட்டியதுடன், 34 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சி மேற்குவங்கத்தை நாசமாக்கியது. கடந்த 5 ஆண்டுகால திரிணமூல் ஆட்சி மேற்குவங்கத்தை சர்வநாசமாக்கி விட்டது என்று சுட்டிக்காட்டி பேசினார்.
இருந்தாலும், திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜக-வுக்கும் இடையே மறைமுக உறவு உள்ளது. அதனால்தான் மாநிலங்களவையில் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ பிரச்சினை விவாதத்துக்கு வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி எந்த விசாரணைக்கும் உத்தரவிடவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இடது சாரி காங்கிரஸ் கூட்டணி ஒருபுறம், பாஜக மறுபுறம் என்று மம்தாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தாலும், மாநிலத்தில் மீண்டும் மம்தா வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழல் இருப்பதாகவே தெரிகிறது.
தொடர் வெற்றிகள்
கடந்த 2011-ம் ஆண்டில் மேற்குவங்க மாநிலத் தில் இடதுசாரிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் இருந்து, இன்றுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசிய போதும், அதை முறியடித்து 34 மக்களவை தொகுதி களில் திரிணமூல் வெற்றி பெற்றது.
கடந்த 5 ஆண்டுகளாக நடந்த ஆட்சி பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும், இடதுசாரிகள் ஆட்சியைவிட பரவாயில்லை என்கின்றனர் பொது மக்கள். மேலும், இந்த 5 ஆண்டுகளில் இடதுசாரி கள் மீதான எண்ணத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் மக்கள் கருதுகின்றனர். இந்தக் காரணங்களால் அடித்தட்டு மக்களின் மனநிலை மம்தா பக்கம் சாய்கிறது என்பதை அவர்களிடம் பேசும்போது உணர முடிகிறது.
வெடிகுண்டு புழக்கம்
மேற்குவங்கத்தில் அரசியல் ரீதியான கொலை கள் நடப்பதாகவும், அரசு அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடப்பதால் அரசியல் கொலைகளை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் திரிணமூல் கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இப்படி இருதரப்பும் குற்றம்சாட்டி வரும் நிலை யில், தேர்தல் நேரத்தில் அண்டை மாநிலங்களில் இருந்து வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் சட்ட விரோதமாக மேற்குவங்கத்துக்குள் நுழைவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வீடியோ கான்பரன்சிங் மூலம் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதில் மேற்குவங்க தலைமைச் செயலர் வாசுதேவ் பானர்ஜி, உள்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஜைதி பேசும்போது, “சாராயம், வெடி பொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை ஜார்க் கண்ட், பிஹார், ஒடிசா உள்ளிட்ட அண்டை மாநிலங் களில் இருந்து மேற்குவங்கத்துக்குள் கொண்டு வரப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குகளை கைப்பற்ற பணம், விருந்து, சாராயம், இலவச பொருட்கள் வழங்குவதைத் தடுக்க மாவட்ட ஆட் சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினர் (500 கம்பெனி) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்தா லும், அவர்களால் சட்டம் ஒழுங்கு பணியை கவனிக்க முடியாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மேற்குவங்கத்தில் நக்ஸலைட்டுகள் நடமாட்டம் உள்ள வடக்கு பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளார். வாக்குப்பதிவுக்கு முன்பாக, அப்பகுதிகளில் தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நிலைமையை கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
‘தீதீ’க்கே ஓட்டு
கொல்கத்தாவில் தேசப்பிரியா மார்க்கெட் பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ள 23 வயது இளைஞர் சோமோஜித் முகர்ஜி கூறும்போது, “சிபிஎம் ஆட்சியைவிட திரிணமூல் ஆட்சி நன்றாக உள்ளது. வன்முறை சம்பவங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ‘ஸ்டிங் ஆபரேஷன்’ போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ‘தீதீ’ தான் வெற்றி பெறுவார். அவருக்கு தான் எங்கள் ஓட்டு” என்றார்.
தமிழகத்துடன் ஒற்றுமை
தமிழகம், மேற்குவங்கம் இரண்டுமே 2011-ல் தேர்தலை சந்தித்த மாநிலங்கள். இந்த ஆண்டு மீண்டும் தேர்தலை சந்திக்கின்றன. இரண்டு மாநிலங்களிலும் பெண் முதல்வர்களே ஆட்சி செய்கின்றனர். இருவருமே திருமணம் ஆகாதவர்கள். திரிணமூல் காங்கிரஸ், அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே பெரிய கட்சிகளின் கூட்டணி எதுவுமின்றி தனித்து போட்டியிடுகின்றன. இரண்டு மாநிலங்களிலுமே மீண்டும் ஆட்சியை தக்க வைக்க ஆளுங்கட்சி முயற்சிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT