Published : 16 Dec 2021 06:42 PM
Last Updated : 16 Dec 2021 06:42 PM
புதுடெல்லி: 34 வெளிநாடுகளின் 342 செயற்கைக்கோள்களை ஏவியதால் இந்தியாவிற்கு 35 மில்லியன் டாலர், 10 மில்லியன் யூரோ வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை எம்.பி.,யான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் இது தொடர்பாக இன்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அளித்த
அமைச்சர் ஜிதேந்திரசிங், "கடந்த 1999 முதல் மொத்தம் 34 வெளிநாடுகளின் 342 செயற்கைக்கோள்கள் இந்தியாவிலிருந்து ஏவப்பட்டுள்ளது. இதற்கான ஏவுதளமாகவும், ஒருங்கிணைப்பு பணியிலும் மத்திய அரசின் இஸ்ரோ நிறுவனம் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
அமைச்சர் ஜிதேந்தர்சிங் சமர்ப்பித்த வெளிநாடுகளின் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலாக 226 செயற்கைக்கோள்களை அமெரிக்கா ஏவியுள்ளது. அடுத்தபடியாக கனடாவும், பிரிட்டனும் தலா 12 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளன.
ஐரோப்பிய நாடான ஜெர்மனி மூன்றாவது எண்ணிக்கையில் 11 செயற்கைகோள்களை ஏவியுள்ளது. சிங்கப்பூர் 8, குடியரசு நாடான கொரியா 6, இத்தாலி மற்றும் லக்ஸம்பர்க் தலா 5 ஏவியுள்ளன. பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகியவை தலா 4 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளன.
இந்தோனேசியா, இஸ்ரேல், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தலா 3 செயற்கைகோள்களை இந்தியாவிலிருந்து ஏவியுள்ளன. டென்மார்க் மற்றும் ஸ்பெயின் தலா 2 செயற்கைக்கோள்களையும் ஏவியுள்ளன.
ஒரே ஒரு செயற்கைக்கோளை ஏவியப் பட்டியலில் கொலம்பியா, பிரேசில், மலேசியா, துருக்கி, செக் குடியரசு, ஸ்லோவேகியா, நார்வே மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பூமி ஆய்வு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சோதனைகளுக்காக ஏவப்பட்டன எனவும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
செயற்கைக்கோள்கள் அனுப்பியதற்காக நிர்ணயித்த தொகையின்படி வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அந்நியச்செலவாணியும் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் தகவலளித்தார்.
இதில், 35 மில்லியன் அமெரிக்க டாலராகவும், 10 மில்லியன் ஐரோப்பிய ஈரோவாகவும் கிடைத்திருப்ப்பதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT