Published : 16 Dec 2021 06:09 PM
Last Updated : 16 Dec 2021 06:09 PM
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி, ஷீனா போரா, ராகுல் முகர்ஜி இந்தப் பெயர்கள் 2012ல் ஒரு கிரிமினல் வழக்கால் ஊடக வெளிச்சத்தில் இருந்தது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் கைதான இந்திராணி முகர்ஜி தான் கொலை செய்ததாகக் கூறப்படும் தனது மகள் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக சிபிஐ இயக்குநருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்திராணி கடிதம் எழுதியதை அவரது வழக்கறிஞர் சானா கானும் உறுதி செய்துள்ளார்.
யார் இந்த இந்திராணி? எதற்காக சிறை சென்றார்?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பீட்டர் முகர்ஜியின் மனைவி. இவரும் ஓர் ஊடக நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றி வந்தார். இவர் பீட்டர் முகர்ஜியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதல் கணவர் மூலம் ஷீனா போரா என்ற மகள் இருந்தார். ஆனால் மகள் பற்றிய தகவலை பீட்டரிடம் மறைத்த இந்திராணி மகளை தனது சகோதரி என்று கூறி வந்தார்.
இந்நிலையில், பீட்டர் முகர்ஜியின் முந்தைய திருமணத்தின் மூலம் அவருக்குப் பிறந்த ராகுல் முகர்ஜிக்கும், ஷீனா போராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இந்திராணி முகர்ஜி கண்டித்து வந்தார். ஆனால் மகள் தனது பேச்சைக் கேட்காத நிலையில் இந்திராணி முகர்ஜி தனது கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ரவியுடன் சேர்ந்து ஷீனாவை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை நடந்திருந்தாலும் இது 2015ல் தான் வெளிச்சத்துக்கு வந்தது.
ஷீனா போரா அமெரிக்கா சென்றுவிட்டதாக பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட அனைவரையும் இந்திராணி நம்பவைத்தார். ஆனால், 2015ல் ஷ்யாம்வர் ரவி வேறு ஒரு வழக்கில் போலீஸில் சிக்கியபோது இந்திராணி முகர்ஜியுடன் இணைந்து அவரது மகளைக் கொலை செய்ததாகக் கூறினார்.
இதனையடுத்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சில நாட்களிலேயே விசாரணை சிபிஐ வசம் சென்றது. ஒருகட்டத்தில் இந்திராணி முகர்ஜி மகள் ஷீனா போராவை கொலை செய்து ஓட்டுநருடன் இணைந்து எரித்து புதைத்ததாகக் கூறினார். ஓட்டுநர் கூறிய இடத்தில் தோண்டியபோது பாதி எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடைத்தது. இந்த வழக்கில் இந்திராணியின் குற்றம் நிரூபணமானதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு முதல் அவர் மும்பை பைக்குல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் திடீரென, சிபிஐ இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அக்கடிதத்தில், எனது மகள் ஷீனா போரா இன்னும் உயிருடன் இருக்கிறார். என்னுடன் சிறையில் இருந்த பெண் ஒருவர் ஷீனாவை காஷ்மீரில் பார்த்ததாகச் சொல்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்துங்கள் என்று இந்திராணி அக்கடிதத்தில் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
2019 ஆம் ஆண்டு இந்திராணி, பீட்டர் விவகாரத்து நடந்தது. இந்த வழக்கில் கைதான பீட்டர் முகர்ஜிக்கு 2020ல் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்திராணியின் ஜாமீன் மனு மீதான விசாரனை நடைபெற்று வரும் நிலையில் திடீர் திருப்பமாக அவர் ஷீனா போரா உயிருடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT