

கோழிக்கோடு: பாலியல் சமத்துவத்தை உணர்த்தும் வகையில் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரே மாதிரியான பேண்ட், சர்ட் சீருடை அணிவதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தத் திட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குப் தொடரவும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி தயாராகி வருகிறது.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குச் சீருடை என்றால் அது பேண்ட், சட்டை என்றும், மாணவிகளுக்கு சுடிதார், துப்பட்டா என்பது பெரும்பாலான பள்ளிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும். அதேசமயம், மாணவர்கள் அணியும் பேண்ட், சட்டை சீருடையை மாணவிகள் அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை.
இதை உணர்த்தும் வகையில், பாலியல் சமத்துவத்தை பிரதிபலிக்கும் விதமாக மாணவர்கள் அணியும், பேண்ட், சட்டை சீருடையை மாணவிகள் அணியும் திட்டத்தை “ஒரே ஸ்வதந்த்திரயம், ஒரே சமீபனம்” என்ற பெயரில் கேரள அரசு கொண்டுவந்துள்ளது.
இதை எதிர்த்து கோழிக்கோடு நகரில் உள்ள பாலுசேரி நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
கேரள அரசு கொண்டுவந்துள்ள “ஒரே ஸ்வதந்த்திரயம், ஒரே சமீபனம்” அதாவது பாலியல் சமத்துவம் என்ற பெயரில் மாணவர்களின் உடையை மாற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. பள்ளியில் கற்பிக்கும் பெண் ஆசிரியைகளின் உடையை மாற்றாமல் இருக்கும்போது, மாணவர்களின் ஆடைகளை மட்டும் மாற்றுவது ஏன் என்று இந்திய முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தத் திட்டம் முதல் கட்டமாக 11-ம் வகுப்பு பயிலும் 260 மாணவர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 60 பேர் மட்டுமே மாணவர்கள், 200 பேர் மாணவிகள்.
இந்தத் திட்டத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மத்தியில் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாத நிலையில் முஸ்லிம் லீக் கட்சியினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாணவிகளை சுடிதார் அணிய அனுமதிக்காமல் பேண்ட், சர்ட் அணியவைப்பது மாணவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது, பெண்களின் ஒழுக்கத்தைச் சீண்டுவதாகும். பேண்ட், சட்டை அணிவது மாணவர்களின் ஆடை, தாராளவாத சிந்தனை என்ற பெயரில் மாணவர்கள் அணியும் ஆடைகளை வலுக்கட்டாயமாக மாணவிகளிடம் திணிக்கக் கூடாது என்று இந்திய முஸ்லீம் லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெற்றோர்-ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மாணவிகள் அணியும் ஆடை குறித்து கவலைகளைத் தெரிவித்த பின்பும் மனநிறைவான பதிலை பள்ளி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து பள்ளி முன்பு, இந்திய முஸ்லிம் லீக் மாணவர்கள் அமைப்பான சன்னி மாணவர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
சன்னி மாணவர்கள் அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில், “மாணவிகளிடம் வலுக்கட்டாயமாகப் பாலியல் சமத்துவத்தைப் புகுத்தும் ஆடையை அணிய வைக்கமாட்டோம் எனத் தலைமை ஆசிரியர் உறுதியளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து கூறுகையில், “பாலியல் சமத்துவத்தில் முன்னேற்றத்துக்கான முயற்சி. தங்கள் குழந்தைகளை யார் விரும்புகிறார்களோ அவர்கள் இந்த முற்போக்கு முயற்சியை எதிர்க்க மாட்டார்கள். இதை எதிர்ப்போர், கேரளாவின் நலனுக்கு எதிரானவர்கள்” எனத் தெரிவித்தார்.
பொதுக்கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி கூறுகையில், “பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் எந்த முயற்சியையும் அரசு ஊக்கப்படுத்தும்” எனத் தெரிவித்தார்.