Published : 16 Dec 2021 12:57 PM
Last Updated : 16 Dec 2021 12:57 PM
புதுடெல்லி: ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை இணைப்பது, ஆண்டுக்கு 4 முறை புதிய வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட 4 தேர்தல் சீர்திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்துக்கு அதிக அதிகாரம் மற்றும் போலி வாக்காளர்களைத் தடுத்தலைப் பிரதானமாக வைத்து இந்தத் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இதற்கான மசோதாவை நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடும் எனத் தெரிகிறது.
பான்கார்டு-ஆதார் கார்டு இணைப்பு போல், ஆதார் கார்டையும், வாக்காளர் அடையாள அட்டையையும் இணைப்பது முதல் சீர்திருத்தமாகும். இந்தத் திருத்தத்தை கட்டாயமாக்காமல் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அந்தரங்க உரிமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருப்பதால், இந்த நடைமுறை வாக்காளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தைப் பரிசோதனை அடிப்படையில் தேர்தல் ஆணையம் சில மாவட்டங்களில் செய்துள்ளது. அதில் சாதகமான, வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் போலி வாக்காளர்கள் வருவதைத் தடுக்க முடியும், தேர்தல் நடைமுறை வலுப்படுத்தப்படும்.
2-வதாக, ஆண்டுக்கு ஒருமுறைதான் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைமுறை இருந்து வருகிறது. இதை ஆண்டுக்கு 4 முறை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய வாக்காளர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் ஆண்டுக்கு 4 முறை புதிய வாக்காளர் சேர்ப்பு செயல்படுத்தப்பட உள்ளது.
3-வதாக பாலினச் சமத்துவம் முக்கியத்துவம் அளித்து திருத்தம் செய்யப்படுகிறது. அதாவது, பாதுகாப்புப் பணியில் கணவர் இருக்கும்பட்சத்தில் அவரால் நேரடியாக சொந்த இடத்துக்கு வந்து வாக்களிக்க முடியாத சூழலில், அவருக்கு பதிலாக அவரின் மனைவி சர்வீஸ் வாக்கைச் செலுத்த நடைமுறையில் அனுமதியிருக்கிறது.
ஆனால், மனைவி இதுபோன்ற அரசுப் பணியில் இருந்தால், அவர் வாக்களிக்க முடியாத சூழலில் சர்வீஸ் வாக்கைக் கணவர் வாக்களிக்க இடமில்லை. ஆனால், இந்தத் திருத்தம் மூலம் கணவரும் வாக்களிக்க வகை செய்யும் திருத்தம் செய்யப்பட உள்ளது.
4-வதாக, தேர்தல் ஆணையம் எந்த இடத்திலும் தேர்தல் நடத்த அனுமதிக்கப்படுகிறது. சில இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள், முக்கிய நிறுவனங்களைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துவதில் எதிர்ப்புகள் இருப்பதால், இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT