Published : 16 Dec 2021 11:12 AM
Last Updated : 16 Dec 2021 11:12 AM
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் முக்கியக் கொண்டாட்டமான துர்கா பூஜா நிகழ்ச்சியை, கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் இணைத்துள்ளது யுனெஸ்கோ. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது பாராட்டைப் பதிவு செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில் யுனெஸ்கோ, கொல்கத்தாவில் கொண்டாடபப்டும் துர்கா பூஜா நிகழ்ச்சியை, கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் இணைத்துள்ளது.
இது தொடர்பாக யுனெஸ்கோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "கொல்கத்தாவின் துர்கா பூஜா, யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளது. வாழ்த்துகள் இந்தியா" எனப் பதிவிட்டுள்ளது. கூடவே துர்கா தேவியின் சிலை புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.
இது தொடர்பாக மேற்குவங்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "துர்கா பூஜா எங்களின் பெருமித அடையாளம். வரலாற்று சிறப்பம்சம். இந்த விழாவை யுனெஸ்கோ தனது பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது. இது மேற்குவங்க வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். வங்காளிகளுக்கு வாழ்த்துகள். துர்கா பூஜாவை மனிதகுலத்தின் பாரம்பரிய கலாச்சார அடையாளமாக தேர்வு செய்த யுனெஸ்கோவுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இது வங்கத்துக்கு பெருமித தருணம். உலகம் முழுவதும் உள்ள வங்காளிகளுக்கும் பெருமையானதொரு தருணம். துர்கா பூஜா என்பது ஒரு விழாவையும் தாண்டிய உணர்வுகளின் பிரதிபலிப்பு. அந்த உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும். இப்போது அது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ இந்த விழாவை தனது கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளதால் நாம் அனைவரும் மகிழ்ந்திருப்போம்" எனக் கூறியுள்ளார்.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நம் பெருமைமிகு கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும், தேசிய ஒற்றுமையையும், துர்கா பூஜை வெளிப்படுத்துகிறது.
கொல்கத்தா துர்கா பூஜையை, நாம் அனைவரும் ஒரு முறையாவது கண்டுகளிக்க வேண்டும். யுனெஸ்கோ பாரம்பரிய நிகழ்ச்சி பட்டியலில் துர்கா பூஜை சேர்க்கப்பட்டுள்ளது 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை, மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT