Published : 16 Dec 2021 09:55 AM
Last Updated : 16 Dec 2021 09:55 AM

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து பேசினார்.

அவர் பேசுகையில், இந்த அரசாங்கம் எப்போது தேசத்தின் மகள்கள், சகோதரிகளின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து பெண்களைக் காக்க, அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்வது அவசியம். இப்போது நாட்டில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது. அரசாங்கம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அவ்வாறு திருத்தம் மேற்கொண்டு பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்.

முன்னதாக, பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க நிதி ஆயோக் செயற்குழுவை அமைத்திருந்தது. அதற்கு ஜெயா ஜேட்லி தலைமை வகிக்கிறார். நிதி ஆயோக் நிபுணர் மருத்துவர் வி.கே.பால், சுகாதார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் இந்த செயற்குழுவில் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படியே பிரதமரும் பெண்ணின் திருமண வயதினை உயர்த்துவது தொடர்பாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி இது நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் பெறும்.

இதற்கான பரிர்ந்துரையை டிசம்பர் தொடக்கத்தில் செயற்குழு சமர்ப்பித்ததாகத் தெரிகிறது. அதில், பெண்ணின் திருமண வயதை அதிகரிப்பதால் அவளின் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாடு உறுதி செய்யப்படும் அது குடும்பம், சமூகம், குழந்தைகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x