Published : 15 Dec 2021 08:18 AM
Last Updated : 15 Dec 2021 08:18 AM
புதுடெல்லி: ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து, அது வளரும் சூழல் ஏற்பட்டால் நாம் பயன்படுத்தும் தடுப்பூசிகளின் செயல்திறன் செயலிழக்கும் வாய்ப்பு ஏற்படலாம். ஆதலால், தடுப்பூசிகளில் தேவைக்கு ஏற்ப மாற்றம் கொண்டுவரத் தயாராவது அவசியம் என்று கோவிட் தடுப்புக் குழுவின் தலைவர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ககப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 70 நாடுகளுக்குப் பரவிவிட்டது. தென் ஆப்பிரி்க்கா, கிழக்கு ஆப்பிரி்க்காவிலிருந்து வரும் மக்களுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளையும்,சில நாடுகள் தடைகளையும் விதித்துள்ளன.
இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை மீறி பாதிக்கிறது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவி்க்கின்றன. இருப்பினும் முழுமையான தகவல் ஏதும் இல்லை.
இந்நிலையில் மத்திய அரசின் கோவிட் தடுப்புக்குழுவின் தலைவர் வி.கே.பால், இந்திய தொழில்வர்த்தகக் கூட்டமைப்பின் சார்பில் நடந்த விழாவில் நேற்று பங்கேற்றார். அப்போது வி.கே.பால் பேசியதாவது:
நாம் டெல்டா வைரஸின் பாதிப்புகளை பார்த்தோம், அதில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறோம்.இப்போது அடுத்ததாக ஒமைக்ரான் அதிர்ச்சியை பார்த்து வருகிறோம். கடந்த 3 வாரங்களாக ஒமைக்ரான் பரவலின் கட்டங்களைப் பார்த்து வருகிறோம்.
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும், வளரும் சூழலில், நம்முடைய தடுப்பூசிகளின் செயல்திறன் செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், தடுப்பூசியில் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்வது அவசியம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
இப்போது இருக்கும் தளத்தைப் பயன்படுத்தி எவ்வளவு விரைவாக தடுப்பூசி உருவாக்க வேண்டும் என்பது முக்கியம். கரோனா வைரஸின் இப்போதுள்ள உருமாற்றத்தை மையமாக வைத்து தடுப்பூசி தயாரிக்க வேண்டும்.
ஜெனரிக் தடுப்பூசியின் விரைவான வளர்ச்சியிலிருந்து நகர்ந்து, தடுப்பூசிகளை தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய சூழலை உருவாக்க நாம் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இது நடக்காது, ஆனால் ஒவ்வொரு ஆண்டும்கூட நடக்கலாம் என்பதை அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பாரம்பரிய மருந்துத் துறையின் செயல்திட்டத்தையும், ஆபத்தை எதிர்கொள்ளும் மனப்பான்மையையும் நாம் மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். கரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான பயனுள்ள மருந்துக்காக இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
வைரஸை சாதாரணமாக எடுக்க முடியாது என்பதை கரோனா பெருந்தொற்று நமக்கு கற்பித்துவிட்டது. உடலில் கணிக்க முடியாத அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு நாம் மதிப்பளித்து அதை களைய, சிகிச்சையளிக்க வேண்டும்.
கரோனா பெருந்தொற்று ஒயவில்லை. இன்னும் நாம் தொடர்ந்து நிலையற்ற தன்மையுடன்தான் போராட வேண்டும். அதேநேரம் பெருந்தொற்று முடியும் காலத்தை நோக்கி நகர்கிறோம் என நம்புவோம். ஒமைக்ரான் பாதிப்பு லேசாக இருக்கும், எளிதாகக் கையாள முடியும் என்று நம்புவோம்
இவ்வாறு வி.கே.பால் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT