Published : 14 Dec 2021 05:46 PM
Last Updated : 14 Dec 2021 05:46 PM

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அடுத்த 6 மாதங்களில் கரோனா தடுப்பூசி: பூனாவாலா

புதுடெல்லி

3 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி அடுத்த 6 மாதங்களில் நடைமுறைப்படுத்தபடும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 2021 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை அரசாங்கம் வழங்குகிறது. தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுடன் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 130 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை ஓய்ந்துவிட்ட நிலையில், புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் குழந்தைகள் அதிகமான அளவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆதலால், இந்தியாவிலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவதை தொடங்கலாமா என்ற கருத்து நிலவுகிறது

இதனால் 12 வயது முதல் 17 வயது வரை உள்ள 44 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதோருக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்தும் தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆலோசனை செய்தது.

ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் 3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி அடுத்த 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

சிஐஐ மாநாட்டில் பங்கேற்று பேசிய ஆதார் பூனாவாலா கூறியுள்ளதாவது:

குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. ஆய்வுகள் அனைத்தும் தெளிவான முடிவுகளை கொடுத்துள்ளன. 3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி அடுத்த 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பூசி நல்ல செயல்திறன் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x