Published : 14 Dec 2021 02:40 PM
Last Updated : 14 Dec 2021 02:40 PM

கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைவிட அதிகமானோருக்கு இழப்பீட்டுத் தொகை: குஜராத் அரசு வழங்கியது

கோப்புப்படம்

அகமதாபாத்: கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் அரசின் அதிகாரபூர்வ தகவலின்படி கரோனாவில் 10 ஆயிரத்து 98 பேர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 19 ஆயிரம் பேருக்கு அதிகமாக இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைச் செயலர் மனோஜ் அகர்வால் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலைப் பின்பற்றிதான் கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

இது தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்ட அதிகாரிகள், விண்ணப்பங்களை விநியோகம் செய்து, வழிகாட்டலின்படி இழப்பீட்டை வழங்குகிறார்கள். முடிந்தவரை பல குடும்பங்களுக்கும் மாநில அரசு உதவும். மாவட்ட ஆட்சியர் அலுவலம் வாயிலாக இழப்பீடு உரியவர்களுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்காக இதுவரை குஜராத் அரசு 34 ஆயிரத்து 678 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. ஆனால், குஜராத் அரசின் அதிகாரபூர்வ கரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்து 98 பேர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாகக் குடும்பத்தாருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், குஜராத் அரசோ, கரோனா முதல் மற்றும் 2-வது அலையில் உயிரிழப்பைக் குறைத்துக் காட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரிய ஆடிட் குழுவை குஜராத் அரசு நியமித்தது. இந்தக் குழுவினர் உயிரிழந்தவர்கள் எந்தக் காரணத்தால் உயிரிழந்தார்கள், கரோனாவால் உயிரிழந்தார்களா என்பதை விசாரணை செய்து அறிக்கை அளிப்பார்கள். ஆனால், இந்தக் குழுவில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அதிகாரிகள் இணை நோய்கள் இருந்து கரோனாவால் உயிரிழந்தவர்களைக் கணக்கில் எடுக்கவில்லை.

குஜராத் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அமித் சவாதா கூறுகையில், “கரோனா தொற்றால் கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மட்டும் 70 ஆயிரம் விண்ணப்பங்களை இழப்பீடு வழங்கப் பெற்றுள்ளது. இன்னும் மக்கள் இழப்பீடு கோரி விண்ணப்பித்து வருகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x