Last Updated : 14 Dec, 2021 09:16 AM

15  

Published : 14 Dec 2021 09:16 AM
Last Updated : 14 Dec 2021 09:16 AM

பிரதமரின் புகைப்படம் உங்களுக்கு ஏன் அவமானமாக தெரிகிறது?- தடுப்பூசி சான்றிதழ் வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் கேள்வி

கரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் உங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்று கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிவி குன்னிகிருஷ்ணன், பிரதமர் என்பவர் நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். அவரது புகைப்படம் தடுப்பூசி சான்றிதழில் இடம்பெறுவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் பீட்டர் மயலிபரம்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜித் ஜாய், வேறு எந்த ஒரு நாட்டிலும் இதுபோன்ற நடைமுறை இல்லையே என்றார்.

அதற்கு நீதிபதி, மனுதார் பிரதமரை ஏன் அவமானமாகக் கருதுகிறார். பிரதமரை மக்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்துள்ளனர். நமக்கு வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருக்கலாம். இருந்தாலும் அவர் தான் நமது பிரதமர். மற்ற நாடுகளில் தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் இடம்பெறவில்லை என்றால், ஒருவேளை அவர்களுக்கு தங்களின் பிரதமரை நினைத்து பெருமிதம் உணர்வு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாம் நமது பிரதமரை பெருமையாக நினைக்கிறோம் என்றார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், கரோனா தடுப்பூசி சான்றிதழ் என்பது தனிநபரின் விவரங்கள் அடங்கிய ஓர் ஆவணம். அதனால், அதில் பிரதமரின் புகைப்படத்தை அச்சிடுவது தனிநபரின் உரிமையில் தலையிடுவதாகும் என்றார்.

அதற்கு நீதிபதி நாட்டில் உள்ள 100 கோடி பேருக்கு, கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் இடம்பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லையே? உங்களுக்கு மட்டுமே ஏன் அது பிரச்சினையாக இருக்கிறது என்று வினவினார்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் சீர்தூக்கிப் பார்த்து இதில் எந்த முகாந்திரமும் இல்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்யும் என்றார்.

இந்த வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்தது. மனு தாரரின் வழக்கறிஞர் அஜித் ஜாய், பிரதமரை பெருமித அடையாளமாக நினைப்பது தனிநபர் விருப்பம் சார்ந்தது. மேலும், விளம்பரங்கள், பிரச்சாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும், தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்வது மக்களின் மனங்களில் கருத்தியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் என்று அண்மையில் தேர்தலை சந்தித்த மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன என்பதை சுட்டிக் காட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x