Last Updated : 14 Dec, 2021 09:17 AM

1  

Published : 14 Dec 2021 09:17 AM
Last Updated : 14 Dec 2021 09:17 AM

பெண்களுக்கு எதிரான பிற்போக்குக் கருத்து: சிபிஎஸ்இக்கு டெல்லி மகளிர் ஆணையம் 72 மணிநேரம் கெடு

கோப்புப்படம்

புதுடெல்லி

சிபிஎஸ்இ 10-ம்வகுப்பு ஆங்கிலப் பாடக் கேள்வித் தாளில் பெண்களுக்கு எதிராக பிற்போக்குக் கருத்துக்களையும், ஆணாதிக்க மனப்பான்மையையும், பாலின பாகுபாட்டையும் உருவாக்கும் வகையில் கருத்துக்கள் இருந்தமைக்கு சிபிஎஸ்ஸி விளக்கம் அளிக்க 72 மணிநேரம் கெடுவிதி்த்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக் காலத் தலைவர் சோனியா காந்தி, மக்களவையில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கேள்வித்தாளில் பெண்களைப் பற்றிய பிற்போக்கு கண்ணோட்டத்தில் இருக்கும் கேள்வி குறித்த விவாகரத்தை கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் எழுப்பி மத்திய அ ரசிடம் இருந்து விளக்கம் கோரினார். மேலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சிபிஎஸ்இ 10ம்வகுப்பு ஆங்கிலப்பாடக் கேள்வித்தாளில் பெண்கள் குறித்து பிற்போக்குத்தனமான கருத்துக்கள் இருந்தன. அதில் “20ம் நூற்றாண்டில் குழந்தைகள் குறைவாக இருந்ததற்கு பெண்ணியம்தான் அதற்கு காரணம். தந்தை எனும் வார்த்தைக்கு அதிகாரம் இல்லை.

திருமணமான பெண்கள் தங்களுக்கென வேலைக்குச் சென்று தங்களுக்கென அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டனர். பெண்களின் எழுச்சி குழந்தைகளின் மீதான கட்டுப்பாட்டை அழித்துவிட்டது.

கணவரின் வழியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தாய் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க முடியும். ஆண்களை அவர்களின் பீடத்திலிருந்து இறக்கியதன் மூலம் மனைவியும் தாயும், தங்களைத் தாழ்த்திக்கொண்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மக்களவையில் எழுப்பிய சோனியா காந்தி, உடனடியாக அதுபோன்ற கருத்துக்களை கேள்வித் தாளில் இருந்துநீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் பெண்குக்கு எதிராக பிற்போக்கு கருத்துக்களை வெளியிட்டதற்கு டெல்லி மகளிர் ஆணையம் சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் சிபிஎஸ்இக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :

“ 10-ம்வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் உள்ள ஒரு கேள்வியில் பெண்கள் குறித்து பிற்போக்குக் கருத்துக்கள் இருக்கின்றன. குழந்தைகளிடையே ஒழுக்கமின்மை, கீழ்படியாமை அதிகரி்க்க பெண்களுக்கு அதிகமான சுதந்திரம், சமத்துவம் கொடுக்கப்பட்டதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கு எதிராகவும் பாலியல் வேறுபாட்டையும், பாலியல் உணர்ச்சியை தூண்டுவதுபோலவும் இருக்கிறது.

இந்த கேள்வித்தாளை தயாரித்தவர்கள் குறித்த விவரங்கள், இந்த கருத்துக்களை எழுதியவர் குறித்த விவரங்களை தெரிவிக்கவேண்டும். எதற்காக இந்த கருத்துக்கள் கேள்வித்தாளில் இடம் பெற்றன, காரணம் என்ன என்பதையும், பாலின வேறுபாட்டை பரப்பும் இந்த கேள்வித்தாளை சிபிஎஸ்இ ஆய்வு செய்ததா வல்லுநர்கள் பரிசோதித்தார்களா என்பதை விளக்க வேண்டும்.

இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்று 72 மணிநேரத்துக்குள் நாங்கள் கோரியுள்ள அனைத்து கேள்விகளுக்கும் விளக்கத்தை சிபிஎஸ்இ வாரியம் அளிக்க வேண்டும். என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் தெரிவிக்கவேண்டும்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x