Last Updated : 14 Dec, 2021 03:07 AM

1  

Published : 14 Dec 2021 03:07 AM
Last Updated : 14 Dec 2021 03:07 AM

வாரணாசியின் தொண்டு நிறுவன உதவியால் யாசகம் பெற்ற 12 குடும்பத்தினர் தொழில் தொடங்கி சாதனை

புதுடெல்லி

உத்தர பிரதேசம் வாரணாசியில் யாசகம் பெற்று வாழ்ந்தவர்கள் தற்போது தொழில் முனைவோராகி உள்ளனர். இவர்களது மறு வாழ்வின் பின்னணியில் அங் குள்ள தொண்டு நிறுவனம் காரணமாகி உள்ளது.

உ.பி.யில் பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியாக வாரணாசி உள்ளது. தெய்வீக நகரமான இங்கு யாசகம் பெற்று வாழ்பவர்கள் அதிகம். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அங்கு ‘பெக்கர்ஸ் கார்ப்பரேஷன் அண்ட் காமன் மேன் டிரஸ்ட்’ என்ற பெயரில் கடந்த ஜனவரியில் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் சந்திர மிஸ்ரா சாதாரண உதவிகள் செய்வதற்குப் பதில், யாசகர்களை தொழில் முனைவோராக மாற்றும் லட்சியத்துடன் செயல்பட்டார்.

அதன் பலனாக 12 குடும் பங்களை சேர்ந்த 55 பேர் சுய உதவிக் குழுக்களை அமைத்து தொழில் முனைவோராகி உள்ளனர். இவர்கள் சொந்த தயாரிப்பில் மடிக் கணினிக்கான பைகள், பள்ளி, கல்லூரிக்கான பைகள் மாநிலம் முழுவதும் விற் பனையாகின்றன. வாரணாசியின் நட்சத்திர ஓட்டல்களுக்கும் பைகள், அழகிய துணி விரிப்புகளை அனுப்புகின்றனர். டெல்லியில் நடைபெற்ற பாஜக.வின் தேசிய செயற்குழுக் கூட்டத்துக்கும் பல நூறு பைகளை சமீபத்தில் இவர்கள் விநியோகித்தனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சந்திர மிஸ்ரா கூறியதாவது:

ஒரு புள்ளிவிவரத்தின்படி நாட்டிலுள்ள 4,13,670 யாசகர்களுக்காக இந்தியர்கள் வருடத்திற்கு ரூ.3,4242 கோடி நிதி உதவி செய்கின்றனர். இந்த தொகையை ஒரு முதலீடாக மாற்றினால், நம் நாடு தொழில் முன்னேற்றம் அடையும். எனவே, நிதி உதவி பெற்று அவர்களுக்கு அன்றாடம் உணவை மட்டும் அளிக்க நான் விரும்பவில்லை. வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து தொழில் செய்து பிழைப்பதுடன் மற்றவர்களுக்கும் வேலை அளிக்கும் வகையில் அனைவரையும் உருவாக்க விரும்புகிறேன்.

இந்த முயற்சியில் முதல் கட்டமாக 12 குடும்பங்களுக்கு கிடைத்த பலனால் மார்ச் 2023-ம் ஆண்டுக்குள் யாசகம் பெறாதவர்கள் வாழும் நகரமாக வாரணாசியை மாற்ற உள்ளோம். இவ்வாறு சந்திர மிஸ்ரா கூறினார்.

மே.வங்கத்தில் அதிகம்

யாசகம் பெறுபவர்கள் மீது பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின் 2017 புள்ளிவிவரத்தின்படி மேற்குவங்க மாநிலத்தில் அதிகமாக 85,000 பேர் உள்ளனர். அடுத்தநிலையில் 65,835 பேர் உ.பி.யில் வாழ்கின்றனர். இவர்களில் வாரணாசியில் உள்ள 12,000 பேரில் சுமார் 6,000 நல்ல உடல்நிலையில் உள்ளவர்கள். இவர்களிடம் உழைப்பின் பலனை எடுத்துக் கூறி வருகிறார் சந்திர மிஸ்ரா.

இதுகுறித்து சந்திர மிஸ்ரா மேலும் கூறும்போது, ‘‘இவர்களை மாற்றுவதுடன் யாசகம் பெறும் அடுத்த தலைமுறையாக மாறும் அவர்களது பிள்ளைகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் முயற்சி யில் இறங்கி உள்ளோம். இவர்களுக்காக வாரணாசியில், ‘மார்னிங் ஸ்கூல்’ எனும் பெயரில் பகுதி நேரப் பள்ளியையும் தொடங்கி உள்ளேம்’’ என்றார்.

அரசு உதவி வேண்டும்

மத்திய, மாநில அரசுகளின் உதவி இல்லாமல், சொந்த முயற்சியில் தொழில் முனைவோ ராக்கும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளார். இவருக்கு அரசு உதவி கிடைத்தால் அவரது முயற்சிக்கும் கூடுதலானப் பலன் கிடைக்கும். யாசகம் பெறுபவர்களை உழைப் பாளிகளாக மாற்றும் சந்திர மிஸ் ராவுக்கு, அவர்களது உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்துவது சவாலாக உள்ளது. அந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x