Published : 13 Dec 2021 07:11 PM
Last Updated : 13 Dec 2021 07:11 PM
ஔரங்கசீப்பின் அராஜகங்களை வரலாறு கண்டது, மதவெறி மூலம் கலாச்சாரத்தை அழிக்க முயன்றவர்களை வரலாறு கண்டது, ஆனால் இந்த நாட்டின் மண் உலகில் மற்ற பகுதிகளை விட வேறுபாடானது, ஒரு ஔரங்கசீப் இருந்தால், சிவாஜியும் இருப்பார் என பிரதமர் மோடி பேசினார்.
வாரணாசியில் ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
விஸ்வநாதர் ஆலயத்தின் புதிய வளாகம் வெறும் பிரம்மாண்டமான கட்டிடம் மட்டுமல்ல. இதுவொரு இந்திய சனாதன கலாச்சாரத்தின் ஒரு அடையாளம். இது நமது ஆன்மீக ஆன்மாவின் அடையாளம். இது இந்தியாவின் பழமை, பாரம்பரியம், இந்தியாவின் சக்தி, இயக்கத்தின் அடையாளம். ஒருவர் இங்கு வந்தவுடன் அவர் நம்பிக்கையுடன் கடந்த காலத்தின் பெருமையையும் உணருவார்.
இங்கு பழமையும், புதுமையும் ஒன்றிணைந்து வருகிறது. பழமையின் உத்வேகம் வருங்காலத்திற்கான திசையை வழங்குகிறது. இதனை நாம் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் கண்டு வருகிறோம்.
முன்பு ஆலய வளாகம் வெறும் 3000 சதுர அடியில் மட்டுமே இருந்தது. இப்போது சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது கோயில் வளாகத்திற்குள் 50,000 முதல் 75,000 வரை பக்தர்கள் செல்ல முடியும். முதலில் தரிசனம், பின்னர் கங்கையில் நீராடல் அங்கிருந்து நேரடியாக விஸ்வநாதர் ஆலயத்திற்கு வர முடியும்.
காசி நகரின் பெருமைகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், சிவபெருமானின் கருணையால் காசி அழிவற்றதாக திகழ்கின்றது. இந்த பிரம்மாண்டமான வளாகத்தை உருவாக்கிய ஒவ்வொரு தொழிலாளருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தொற்று பரவலின் போது கூட அவர்கள் இங்கு பணியை நிறுத்தவில்லை.
படையெடுப்பாளர்கள் இந்த நகரத்தை தாக்கி அழிக்க முயற்சித்தனர். ஔரங்கசீப்பின் அராஜகங்களை வரலாறு கண்டது. வாள்முனையில் நாகரீகத்தை மாற்ற முயன்றவர்கள், மதவெறி மூலம் கலாச்சாரத்தை அழிக்க முயன்றவர்களை வரலாறு கண்டது. ஆனால் இந்த நாட்டின் மண் உலகில் மற்ற பகுதிகளை விட வேறுபாடானது.
ஒரு ஔரங்கசீப் இருந்தால், சிவாஜியும் இருப்பார். சலார் மசூத் வந்தால், மன்னர் சுகல்தேவை போன்ற துணிச்சல்மிக்க வீரர்கள் இந்தியாவின் ஒற்றுமையின் சுவையைக் காட்டுவார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் காசி மக்கள் ஹேஸ்டிங்ஸ்-க்கு என்ன நடந்தது என்பதை அறிந்திருந்தனர்.
காசி வெறும் வார்த்தையல்ல, இது உணர்வுகளின் படைப்பு. காசியில் வாழ்க்கை மட்டுமல்லாமல் இறப்பும் ஒரு கொண்டாட்டம்தான். காசியில் உண்மை கலாச்சாரமாகும். அன்பு பாரம்பரியமாகும். வாரணாசியில் ஜெகத்குரு சங்கராச்சாரியார், ஸ்ரீ டோம் ராஜாவின் தூய்மையால் உத்வேகம் அடைந்தார். இந்த இடத்தில்தான் கோஸ்வாமி துளசிதாஸ் பகவான் சங்கரனின் அருளால் புனிதமான ராம சரிதத்தை படைத்தார். பகவான் புத்தரின் ஞானம் உலகிற்கு சாரநாத்தை வெளிக்காட்டியது.
கபிர்தாசர் போன்ற புனிதர்கள் சமுதாய மேம்பாட்டிற்காக தோன்றினார்கள். சமுதாயத்தை ஒன்றுமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்குமானால் அப்போது காசி ஆற்றலின் மையமாக இருக்கும். காசி 4 ஜைன தீர்த்தங்கரர்களின் பூமி. அஹிம்சை மற்றும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தது. ராஜா அரிச்சந்திரனின் நேர்மை முதல் வல்லபாச்சாரியா, ராமானந்ஜி ஞானம் வரை, சைதன்ய மகாபிரபு, சமத்குரு ராம்தாஸ் முதல் சுவாமி விவேகானந்தர், மதன்மோகன் மாளவியா வரை இந்த புண்ணிய பூமி துறவிகள், ஆச்சாரியர்கள் என ஏராளமானோருக்கு இருப்பிடமாக இருந்துள்ளது.
சத்ரபதி சிவாஜி மகராஜ் இங்கு வந்தார். ராணி லட்சுமிபாய் முதல் சந்திரசேகர் ஆசாத் வரை ஏராளமான வீரர்களுக்கு கர்ம பூமியாக காசி திகழ்ந்தது. பாரதந்து அரிச்சந்திரா, ஜெய்சங்கர் பிரசாத். முன்சீப் பிரேம்சந்த், பண்டிட் ரவிசங்கர், பிஸ்மில்லாகான் போன்ற திறமை மிக்கவர்கள் இந்த பெரும் நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் உறுதியான முடிவு இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கும். இந்த வளாகம் நமது திறமைக்கும், கடமைக்கும் சான்றாகும். உறுதிப்பாடு மற்றும் உறுதியான சிந்தனை இருந்தால் எதுவும் இயலாதது அல்ல.
கற்பனைக்கு எட்டாதவற்றை சாத்தியமாக்கும் ஆற்றல் இந்தியர்களிடம் உள்ளது. நமக்கு தவம், நோன்பு ஆகியவை தெரியும். நாட்டுக்காக இரவையும், பகலையும் எவ்வாறு கழிப்பது என்பதை நாம் அறிவோம். சவால் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்தியர்களான நாம் அதனை ஒன்று சேர்ந்து முறியடிக்க முடியும்.
இன்றைய இந்தியா நாம் இழந்த பாரம்பரியத்தை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. காசி நகரின் அன்னபூர்ணா அன்னை உறைகிறார். காசியிலிருந்து திருடிச் செல்லப்பட்ட அன்னபூர்ணாவின் சிலை இப்போது ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
என்னைப் பொறுத்தவரை கடவுள் மனிதர்கள் வடிவத்தில் வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் கடவுளின் ஒரு அங்கம். நாட்டுக்காக, தூய்மை, படைப்பு, தற்சார்பு இந்தியாவுக்கான தொடர் முயற்சி ஆகிய 3 உறுதிமொழிகளை மக்கள் ஏற்க வேண்டும்.
தூய்மை என்பது வாழ்க்கைக்கான வழி. கங்கையை புத்துயிரூட்டும் இயக்கத்தில் மக்களின் பங்களிப்பு அவசியம். நீண்ட கால அடிமைத்தனம் நமது நம்பிக்கையை சீர்குலைத்து விட்டது. நமது சொந்த படைப்பாற்றல் மீதான நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம். இன்று இந்த ஆயிரமாண்டு பழமையான காசியிலிருந்து ஒவ்வொரு நாட்டு மக்களையும் முழு நம்பிக்கை, புதுமை ஆகியவற்றுடன் படைப்பாற்றலை பெருக்க வேண்டும்.
தற்சார்பு இந்தியாவுக்காக நமது முயற்சிகளை எழுப்ப வேண்டியது மூன்றாவது தீர்மானம். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளான இந்த அமிர்த காலத்தில் இந்தியா சுதந்திரத்தின் நூறாண்டுகளைக் கொண்டாடும் போது எப்படி இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT