Published : 13 Dec 2021 01:26 PM
Last Updated : 13 Dec 2021 01:26 PM

12 எம்.பி.க்கள் இடைநீக்க விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வர்மா, ஆர். போரா, ராஜாமணி பாட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பி உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். அதேசமயம் மன்னிப்பு கேட்க முடியாது என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டன.

இந்தநிலையில் மாநிலங்களவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பினர். மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது ‘‘இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை மீண்டும் அவையில் அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரி வருகிறோம்.

ஆனால் அதற்கு மத்திய அரசு செவிசாய்க்க வில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதனால் சபை நடவடிக்கைகளை கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க எங்களை தூண்டுகிறது. இதனால், சபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்’’ எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x