Published : 13 Dec 2021 01:36 PM
Last Updated : 13 Dec 2021 01:36 PM
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்துவும் இல்லை, இந்துஸ்தானியும் இல்லை என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரில் நேற்று காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “இந்துத்துவாவாதிகள்தான் அதிகாரத்தை மட்டும் விரும்புவார்கள். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருக்கிறார்கள். இந்துத்துவாவாதிகளை ஆட்சியிலிருந்து மக்கள் அகற்றிவிட்டு உண்மையின் பாதையில் நடக்கும் இந்துக்களை ஆட்சியில் அமரவைக்க வேண்டும்.
இந்துத்துவாவாதிகள் தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அதிகாரத்தைத் தேடுவதற்காகச் செலவிடுகிறார்கள். அதிகாரத்தைத் தவிர அவர்களுக்கு ஒன்றும் தேவையில்லை. அதிகாரத்துக்காக எதையும் செய்வார்கள். அதிகாரத்தைத் தேடி அலையும் பாதையைப் பின்பற்றுகிறார்கள், உண்மையைத் தேடும் பாதையில் இல்லை. இந்த தேசம் இந்துக்களுக்கானது, இந்துத்துவாவாதிகளுக்கானது அல்ல” எனத் தெரிவித்தார்.
இதற்கு பாஜக சார்பில் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா பதில் அளித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''ராகுல் காந்தி தன்னை இந்து என்றும் இந்துத்துவாவாதி அல்ல என்றும் கூறுகிறார். ஆனால், இந்த தேசம் என்ன சொல்கிறதென்றால், ராகுல் காந்தி, இந்துவும் இல்லை, இந்துத்துவாவாதியும் இல்லை, இந்துஸ்தானியும் இல்லை என்கிறது. இதற்குக் காரணம் காந்தி குடும்பத்தினர் இந்துக்களையும், இந்துத்துவாவையும் தீவிரவாத அமைப்புகளான போக்கோஹராம், ஐஎஸ் ஆகியவற்றோடு ஒப்பிட்டு சதி செய்து அவமானப்படுத்துகிறார்கள்.
அதிகார ஆசையுடன் யார் இருக்கிறார்கள் என்பது இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும், சிறிய குழந்தைக்கும் கூட தெரியும். அது காந்தி குடும்பத்தினர்தான். உங்கள் அதிகாரம் பறிக்கப்பட்ட நேரத்தில் கடந்த 1984-ம் ஆண்டு பெரிய கலவரத்தைத் தூண்டிவிட்டீர்கள். ஊழல் செய்தீர்கள், துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டீர்கள். பாலகோட் துல்லியத் தாக்குதலில் மரங்கள் மட்டும்தான் விழுந்தன எனப் பேசினீர்கள்.
இந்துத்துவா என்றால் சீக்கியர்களையும், முஸ்லிம்களையும் கொல்வது என்று ராகுல் காந்தி முன்பு பேசினார். இந்து மதத்தைப் பற்றிய ராகுல் காந்தியின் குடும்பத்தின் மனநிலை இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அடுத்துவரும் தேர்தலை மனதில் வைத்துதான் இந்த வெறுப்புகள் வெளிவருகின்றன.
இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும், குறிப்பாக இந்துக்கள் காங்கிரஸுக்குப் பாடம் புகட்டுவார்கள். அப்போது ராகுல் காந்திக்கு இந்து மதம் என்பது தியாகம் என நம்புவார். இருப்பினும், காந்தி குடும்பத்தினர் இதை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்களில் நிலவும் ஒற்றுமையை ராகுல் காந்தி விரும்புவார் என நான் நினைக்கவில்லை. எப்போதும் தனது பேச்சுகள் மூலம் விஷத்தைப் பாய்ச்சுகிறார் ராகுல் காந்தி. பிரதமர் மோடியின் தலைமையில் இந்த தேசம் வளர்வதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டபோதுதான் முசாபர் நகர் வன்முறை நடந்தது. அப்போது உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த விஷம் தடவிய வார்த்தைகள் எல்லாம் எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்துப் பேசப்பட்டன. குறிப்பாக உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் வைத்துப் பேசப்பட்டவை. இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்குத் துணிச்சல் இருக்கிறதா?
உ.பி. மண்ணில் இதுபோன்று ஆத்திரமூட்டும் பேச்சுகளைப் பேச ராகுல் காந்திக்குத் துணிச்சல் இருக்கிறதா? முதல்வர் யோகியின் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என ராகுல் காந்திக்குத் தெரியும். அதனால்தான் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் சென்று ராகுல் பேசினார்.
ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருப்பது குறித்து ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஏன் பேசவில்லை. மின்சாரக் கட்டணம் உயர்வாக இருப்பது குறித்து ஏன் பேசவில்லை? ராகுல் காந்தி நாதுராம் கோட்சேவின் இரட்டைச் சகோதரர் போலத் தெரிகிறார்.
பாபுராம் சவுரேஸியா கோட்சேவின் தீவிரமான ஆதரவாளராக இருந்து, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர். ஏன் பாபுராம் பற்றி ஒருவார்த்தைகூட ராகுல் காந்தி பேசவில்லை, அவரை ஏன் கட்சியை விட்டு நீக்கவில்லை. ராகுல் காந்தி கோட்சே பற்றிப் பேசுவார். ஏனென்றால் வெறுப்பைப் பரப்ப வேண்டுமே. பிரதமர் மோடி, பாஜக இரண்டுமே காந்தியின் வழிகளைப் பின்பற்றுகிறார்கள்''.
இவ்வாறு கவுரவ் பாட்டியா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT