Published : 13 Dec 2021 11:13 AM
Last Updated : 13 Dec 2021 11:13 AM

உங்கள் தாய், சகோதரியை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்: முஸ்லிம் லீக்குக்கு பினராயி விஜயன் கண்டனம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் | கோப்புப்படம்

கண்ணூர்

கேரள அரசின் வக்பு வாரியக் கொள்கையில் என் ஏழைத் தந்தையை ஏன் இழுக்கிறீர்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை மரியாதை என்றால் என்ன என்பதை அவரின் தாய், சகோதரியிடம் இருந்து கற்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில வக்பு வாரியத்தில் நிர்வாகிகளை நியமிக்க கேரள அரசுத் தேர்வாணையத்துக்கு உரிமை இருப்பதாக அறிவித்தது. இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து கோழிக்கோடு நகரில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அப்போது முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் அப்துர் ரஹ்மான் கலாயி தொண்டர்களிடம் பேசுகையில், “பினராயி விஜயன் மகள் வீணா, முகமது ரியாஸ் திருமணம் சட்டப்படி செல்லாது. இதைத் துணிச்சலாகக் கூறுங்கள்” எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் வக்பு வாரியம் குறித்த கேரள அரசின் கொள்கையில் பினராயி விஜயனின் தந்தையையும் அவதூறாகப் பேசினார். பினராயி விஜயனின் தந்தை கள் இறக்கும் தொழிலாளி. அவரின் மகனான பினராயி விஜயனுக்கு கேரளா ஒன்றும் திருமணச் சீர்வரிசையாக வழங்கப்படவில்லை” என அவதூறாகப் பேசினார்.

முஸ்லிம் லீக் தலைவர் அப்துர் ரஹ்மான் பேச்சுக்கு முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்ணூரில் நடந்த கூட்டத்தில் பினராயி விஜயன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், “கேரள அரசின் வக்பு வாரியக் கொள்கையில் என்னுடைய ஏழைத் தந்தையின் பெயரை ஏன் இழுக்கிறீர்கள் எனப் புரியவில்லை. நான் பள்ளியில் படிக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார். அவரை அவமானப்படுத்தாதீர்கள். உங்களுக்கு எதிராக என் தந்தை என்ன குற்றம் செய்தார். கள் இறக்கும் தொழிலாளியாக அவர் வேலை செய்தது குற்றமா?

கள் இறக்கும் தொழிலாளியின் மகன் என்று பெருமையாகவே அடிக்கடி கூறியிருக்கிறேன். கள் இறக்கும் தொழிலாளியாக என் தந்தை வேலை செய்தது தவறான செயலா?

என் மகள் மற்றும் மருமகன் பற்றித் தவறாகப் பேசுகிறார்கள். முதலில் இப்படி அநாகரிகமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். உங்கள் தாய், சகோதரியை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான கலாச்சாரம் என்பது குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். என் மகள், மருகனுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பேசிய முஸ்லிம் லீக் தலைவர் இதுபோன்ற கருத்துகளை அவரின் குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டாரா” எனக் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x