Last Updated : 14 Mar, 2016 07:39 PM

 

Published : 14 Mar 2016 07:39 PM
Last Updated : 14 Mar 2016 07:39 PM

முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உறவினர்களின் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு:

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது தொடரப்பட்ட சொத்து சேர்ப்பு வழக்கில், அவரது உறவினர்களின் வருமான வரி கணக்கு விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2010-ம் ஆண்டு மே மாதம் வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் கே.ஜி.பாலகிருஷ்ணன். இவர் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராகவும் இருந்தார். இவர் தனது உறவினர்கள் மூலம் வருமானத்துக்கு அதிகமாக 21 சொத்துக்களை சேர்த்ததாக ‘காமன்காஸ்’ என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது. அவரை தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. எனவே, இந்த வழக்கு இப்போது விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று வாதிட்டார். ‘காமன்காஸ்’ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘முன்னாள் நீதிபதி யின் உறவினர்களின் சொத்து விவரங்கள் குறித்து சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

தவறான முன்னுதாரணம்

முகுல் ரோத்கி வாதிடும்போது, ‘முன்னாள் தலைமை நீதிபதியின் சகோதரர், மருமகன் ஆகியோர் நீதிமன்றத்தில் இப்போதும் வழக் கறிஞர்களாக உள்ளனர். மேலும், அவரது உறவினர்கள் யாரும் இந்த வழக்குக்கு தொடர்புடையவர்கள் அல்ல. இந்த வழக்கில் சிபிஐ விசா ரணை கேட்பதும் முறையற்றது. இது, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

கே.ஜி.பாலகிருஷ்ணன் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் இருந்த காலகட்டத்தில், அவரது உறவினர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x