Published : 11 Dec 2021 07:46 PM
Last Updated : 11 Dec 2021 07:46 PM
பள்ளிக் குழந்தைகளின் படிப்பு தடைபடாமலிருக்க மசூதியில் தொழுகைக்கானப் பாங்கு ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குடியில் நடைபெற்றுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநிலத்தில் ஜல்பாய்குடி அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் பெரிய வளாகத்துடன் ஒரு மசூதி அமைந்துள்ளது.
இதிலும், நாடு முழுவதிலும் உள்ளது போல், தொழுகைக்கான அறிவிப்பாக பாங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்தது. கரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு குழந்தைகளுக்கு இணையதள வகுப்புகள் நடைபெற்றன.
இந்த வகுப்புகளை கைபேசிகள் இல்லாத காரணத்தால் ஜல்பாய்குடியின் கிராமத்து குழந்தைகள் பலரும் பாடங்களை கவனிக்க முடியவில்லை. இதனால், அவர்களுக்காக தம் மசூதியின் வளாகத்தில் அப்பகுதி முஸ்லிம்கள் இடமளித்தனர்.
அவர்களது வகுப்பு நேரங்களில் தொழுக்காக எழுப்பும் பாங்கு ஒலியின் சத்தம் குழந்தைகளின் வகுப்புகள் தடைபடுவதாகக் கருதப்பட்டன. இதனால், அக்கிராமத்து முஸ்லிம்கள் கூடிப்பேசி வகுப்பு நேரங்களில் தொழுகைக்கான பாங்கு அளிக்க ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டாம் என முடிவு எடுத்துள்ளனர்.
இது குறித்து ஜல்பாய்குடி மசூதியின் இமாமான நஜ்மூல் ஹக் கூறும்போது, ‘மசூதியின் இடத்தில் நடைபெறும் வகுப்புகளின் குழந்தைகளுக்காக நாம் ஒலிபெருக்கியை அணைத்து வைக்கிறோம். ஏனெனில், கல்வி பெறாத குழந்தைகளால் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது.’ எனத் தெரிவித்தார்.
இந்த சம்பவம், மேற்கு வங்க மாநிலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்படுகிறது. இதனுள் நடைபெறும் 9 முதல் ப்ளஸ்டூ வகுப்புகள் வரையிலானவற்றில் அனைத்து மதக்குழந்தைகளும் இடம் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT