Last Updated : 10 Dec, 2021 07:45 PM

 

Published : 10 Dec 2021 07:45 PM
Last Updated : 10 Dec 2021 07:45 PM

நான் ஒரு வீரரின் மனைவி; என்னவருக்கு புன்னகையுடன் பிரியாவிடை கொடுத்தேன்: பிரிகேடியர் லிட்டரின் மனைவி கீதிகா 

நான் ஒரு வீரரின் மனைவி; என்னவருக்கு நல்லதொரு பிரியாவிடை கொடுக்க வேண்டும் என்று மறைந்த பிரிகேடியர் லக்வீந்தர் சிங் லிட்டரின் மனைவி பேசியுள்ளது காண்போரை கண்ணீர் சிந்த வைக்கும் வகையில் நெகிழ்ச்சி ததும்பும் விதத்தில் உள்ளது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் லக்வீந்தர் சிங் லிட்டர்.

நேற்று முன் தினம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இவரும் உயிரிழந்தார். லிட்டருக்கு, கீதிகா என்ற மனைவி, 16 வயதில் ஆசனா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், இன்று டெல்லியில் அவரது இறுதிச் சடங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

இறுதி நிகழ்வில், லிட்டரின் மனைவி கணவருக்கு வீரப் புன்னகையுடன் பிரியாவிடை கொடுத்தார். இறுதிச் சடங்கின் போது தனது கணவரின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டியில் முத்தமிட்டார் கீதிகா. கைகளில் நிரப்பி வைத்திருந்த ரோஜா இதழ்களை விரல்களின் வழியே சிதறவிட்டு அஞ்சலி செலுத்தினார் மகள் ஆசனா.

பின்னர் கண்ணீரின் ஊடே மனைவி கீதிகா அளித்த பேட்டியில், "லிட்டர் சிறந்த மனிதர். அது எல்லோருக்குமே தெரியும். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இங்கு எத்தனை பேர் வந்துள்ளனர் பாருங்கள். அவர் அற்புதமான குணநலம் கொண்டவர் என்பதற்கு இதுவே சான்று. என் கணவர் எல்லோராலும் நேசிக்கப்பட்டவர்.

இந்தத் தருணத்தில் பெருமிதத்தையும் விட சோகமே மேலோங்குகிறது. எதிர்காலம் மிகவும் நீண்டதாகத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் கடவுள் தந்த பாதையில், இந்த இழப்பை ஏற்றுக் கொண்டு நாங்கள் வாழ வேண்டும். நான் ஒரு வீரரின் மனைவி. அதனால் அவருக்கு புன்னகையுடன் நல்லதொரு பிரியாவிடை கொடுக்க விரும்புகிறேன். ஆனால், இவர் இந்த மாதிரி எங்களுக்குக் கிடைத்திருக்கக் கூடாது. எனது மகள் தான் தந்தையை ரொம்பவே இழந்து தவிப்பாள். அவர் ஒரு நல்ல தந்தை" என்று மெல்லிய குரலில் பேசினார்.

— ANI (@ANI) December 10, 2021

தொடர்ந்து பேசிய மகள் ஆசனா, என் தந்தை தான் எனது நண்பர். அவர் தான் எனக்கு கதாநாயகர். அவர் தான் எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்தார். அவரின் மறைவு எனக்கு மட்டுமல்ல தேசத்துக்கே பேரிழப்பு. அவருடன் 16 ஆண்டு காலம் வாழ்ந்துவிட்டேன். அந்த இனிமையான நினைவுகள் என்னுடன் இனி வரும். ஒருவேளை இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது போல. வாழ்க்கை இனி நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

— ANI (@ANI) December 10, 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x