Published : 10 Dec 2021 05:52 PM
Last Updated : 10 Dec 2021 05:52 PM
ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிறர் முடிவு செய்ய முடியுமா என குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சாலையோர அசைவ உணவு கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் 100 மீட்டர் சுற்றளவில் அசைவ உணவுகளை சிற்றுண்டி கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் உரிமம் பெற்ற மற்றும் உரிமம் பெறாத தெரு வியாபாரிகளுக்கு இந்த பொருந்தும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சாலையோர அசைவ உணவு வண்டிக் கடைகளை தடை செய்யும் குஜராத் அரசின் உத்தரவை ராஜ்கோட், வதோதரா மற்றும் பாவ்நகர் மாநகராட்சிகள் உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்தன.
இதைத் தொடர்ந்து அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர கடைகளை அகற்றின. சாலையோர அசைவ டிபன் வண்டிக் கடைகள் பறிமுதல் செய்து டிரக்கில் ஏற்றப்பட்டன.
சாலையோரங்களில் உள்ள அசைவ சிற்றுண்டிக் கடைகளை தடை செய்ததால், வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்று தெருவோர வியாபாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து 25 தெரு வியாபாரிகள் கூட்டாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பிரேன் வைஷ்ணவ் முன்பு விசாரணைக்கு வந்தது.
நகராட்சி ஆணையரை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவரிடம், நீதிபதி பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார். அப்போது நீதிபதி கூறியதாவது:
அசைவ சாப்பாடுகளை சாப்பிடக்கூடாது என்று நீங்கள் எப்படி அவர்களின் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியும். நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்.
அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, இன்னைக்கு அசைவ உணவு சாப்பிட தடைபோடுபவர்கள், நாளை வெளியிலேயே சாப்பிட கூடாது என்று சொல்ல முடியுமா. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கரும்பு ஜூஸ் விற்க தடை விதிக்க முடியுமா.
ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிறர் முடிவு செய்ய முடியுமா. மக்கள் விரும்பியதை சாப்பிட தடை செய்யமுடியுமா
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT