Published : 10 Dec 2021 05:36 PM
Last Updated : 10 Dec 2021 05:36 PM

விடைபெற்றார் தேசத்தின் மகத்தான வீரர் பிபின் ராவத்: முழு ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி

இறுதிச் சடங்கின்போது ஜெனரல் பிபின் ராவத் உடலுக்கு ராணுவ அதிகாரிகள் தேசியக்கொடி அணிவிக்கும்காட்சி | படங்கள்: ஏஎன்ஐ

முப்படைத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்துக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

தமிழகத்தின் நீலகிரி மலைப்பகுதியில் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தது நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேர் உடல்களும் நேற்று இரவு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டின் முப்படைத் தளபதி உள்ளிட்ட விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை முப்படைத் தளபதி இல்லத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவியின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று முப்படைத் தளபதி இல்லத்தில் அஞ்சலி செலுத்தும் காட்சி

விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் சக ராணுவ அதிகாரிகளான பிரிகேடியர்களுக்கு இன்று காலை பிரார் ஸ்கொயர் மைதானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அந்த இறுதிச் சடங்கில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் முப்படைத் தளபதியின் உடலை சுமந்துகொண்டு அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக இன்று மதியம் புறப்பட்டது. வழியெங்கும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தேசியக் கொடி ஏந்தி கண்ணீர் மல்க இறுதி ஊர்வலத்தில் ராணுவ வாகனத்தில் சென்ற ஜெனரலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

இல்லத்திலிருந்து காமராஜ் மார்க் வழியாக ஊர்வலமாக வந்த இறுதி ஊர்வலம் சுமார் 7.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெல்லி கண்டோன்மென்ட் மயானத்திற்கு வந்து சேர்ந்தது.

முப்படைத் தளபதியின் மகள்கள் இறுதிச் சடங்கு செய்தனர்.

மறைந்த முப்படை தளபதியின் உடலுக்கு பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ், தூதர்கள், இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேச ராணுவ தளபதிகள் பிபின் ராவத்தின் உடலுக்கு மலர் வளையங்கள் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரது உடல்களுக்கும் மலர் வளையங்கள் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

பீரங்கி குண்டுகள் முழங்க தேசத்தின் மகத்தான வீரருக்கு ராணுவ மரியாதை

இறுதி அஞ்சலி நிகழ்வில் பிபின் ராவத்தின் இரு மகள்கள், குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஜெனரலின் இறுதிச் சடங்கில் மகள் இருவரும் தாய் தந்தையருக்கு தீ மூட்டினர்.

கண்டொன்மென்ட் மயானத்தில் முப்படை தளபதி மற்றும் அவரது மனைவி இருவரின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பீரங்கிகளில் 17 சுற்று குண்டுகள் முழங்க 800 வீரர்கள் பங்கேற்க, நாட்டின் உயரிய ராணுவ மரியாதை செய்ய விடைபெற்றார் பிபின் ராவத். தாய் தந்தையர் உடலுக்கு மகள்கள் தாரிணி மற்றும் கிருத்திகா இருவரும் தீ மூட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x