Published : 10 Dec 2021 04:59 PM
Last Updated : 10 Dec 2021 04:59 PM
இந்தியாவில் 25 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அனைத்துமே லேசான அறிகுறி கொண்டதாகவே இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்குத் தொற்று ஏற்பட்டது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ம் நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு ஏறக்குறைய 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலும் அடுத்தடுத்து ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து
மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
நவம்பர் 24 ஆம் தேதி வரை 2 நாடுகளில் மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது 59 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு பதிவாகியுள்ளன. இந்த 59 நாடுகளில் 2,936 ஒமைக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது தவிர 78,054 சாத்தியமான அறிகுறிகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை மரபணு வரிசைமுறை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கண்காணிப்பு, ஸ்கிரீனிங், சர்வதேச பயணிகளைக் கண்காணித்தல் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் ஆகியவை செய்யப்படுகின்றன. மாநிலங்கள் தங்கள் கண்காணிப்பை அதிகரிக்கவும், பிற நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக சோதிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் 25 ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட அனைத்தும் லேசான அறிகுறிகளைக் கொண்டதாகவே உள்ளன. மொத்த எண்ணிக்கையில் 0.04% க்கும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT