Published : 10 Dec 2021 03:27 PM
Last Updated : 10 Dec 2021 03:27 PM
ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடந்துகொண்டிருதப்பதால் சரியாக தெரியாத தகவல்கள், ஊகங்களை தவிர்க்கவேண்டும், இறந்தவரின் கண்ணியம் காக்கப்படவேண்டும் என இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
அவருக்கு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் கேப்டன் பெங்களூரு அழைத்து வரப்பட்டு கமாண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜெனரல் ராவத் மற்றும் பிறரின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தின.
விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் 11 பேரின் இறுதிச்சடங்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானவர்கள் தேசியக்கொடி ஏந்தி இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இதற்கிடையில் விமான விபத்து குறித்தும் முப்படை தளபதியின் மரணம் குறித்தும் பல்வேறு உறுதியற்ற ஊகத் தகவல்கள் பரவி வருகிறது, இது உயிரிழந்த படைத்தளபதியின் கண்ணியத்தை குலைக்கும் செயல் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப்படை வெள்ளியன்றுவெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 11 பேரின் மரணத்திற்கு வழிவகுத்த நீலகிரி (குன்னூர்) ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆதாரமற்ற ஊகங்களை தவிர்க்க வேண்டுகிறோம்.
விபத்துக்கான காரணத்தை விசாரிக்க முப்படை விசாரணை நடந்து வருகிறது. விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். அதுவரை இறந்தவரின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் ஆதாரமற்ற ஊகத் தகவல்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு விமானப்படை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT