Published : 09 Dec 2021 06:49 PM
Last Updated : 09 Dec 2021 06:49 PM
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
ராணுவத்தில் நீண்ட நாட்கள் பணி செய்து வந்த பிபின் ராவத் திறம்படச் செயலாற்றியவர். நமது ராணுவத்தில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யும் திட்டத்துடன் பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் மேற்கொண்டு வந்த செயல்திட்டங்கள் நமது ராணுவத்தில் மிக முக்கிய மாற்றங்களாகக் கருதப்படுகின்றன.
இதுகுறித்து டெல்லியில் இருந்து செயல்படும் லா ஆண்டு சொசைட்டி அலையன்ஸ் அறிவுசார் அமைப்பின் தலைவரும், ‘டிபென்ஸ் கேபிடல்’ மின் இதழின் ஆசிரியருமான என்.சி.பிபிந்திரா ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திற்கு அளித்த பேட்டி:
முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பற்றி உங்கள் கருத்து?
முப்படைகளின் தளபதியான பிபின் ராவத் மிகவும் திறமை வாய்ந்தவர். ராணுவத் தளபதியாக இருந்தபோதே இரண்டு பேரைத் தாண்டி அவருக்குப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி நாட்டின் முதல் முப்படைகளின் தளபதியாக அவரை நியமித்து மத்திய அரசு கெளரவித்தது. இதில் இருந்தே பிபின் ராவத்தின் திறமையை அறிந்துகொள்ள முடியும்.
வழங்கிய பணியை திறம்படச் செய்து முடிக்கக்கூடிய ஒரு ராணுவத் தளபதியாக அவர் தனது பணிக்காலத்தில் பயணித்து வந்துள்ளார். பிபின் ராவத்துக்கு முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி கொடுத்தபோதே இந்திய ராணுவத்தில் முக்கியமான மாற்றங்களைச் செய்யும் திட்டத்துடன்தான் பணி வழங்கப்பட்டது.
பொதுவாக உலக அளவில் ராணுவத்தின் செயல்பட்டை வைத்து வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுவார்கள். ஸ்பெசிஃபிக் கமாண்ட் (specific command) எனப்படும் துல்லிய கமாண்ட், சென்ட்ரல் கமாண்ட், தியேட்டர் கமாண்ட் என ராணுவத்தின் செயல்பாட்டை வகைப்படுத்துவர். அந்த வகையில் இந்திய ராணுவம் specific command என்றும், பாகிஸ்தான் ராணுவத்தை central command என்றும் வகைப்படுத்தலாம். அமெரிக்க ராணுவம் Theater command முறையில் செயல்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தில் பின்பற்றப்படும் தியேட்டர் கமாண்ட் எனக் கூறப்படுவதைப் போல தரைப்படை, விமானப்படை, கப்பல் படை ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் தியேட்டர் கமாண்ட் முறையில் நமது ராணுவத்தை மாற்றும் பணிகள் ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு வழங்கப்பட்டது.
தியேட்டர் கமாண்ட் முறையை முதன்முதலில் 2022-ல் நிறுவுவதற்கான முயற்சியில் பிபின் ராவத் ஈடுபட்டு இருந்தார். நமது நாட்டில் முதல் தியேட்டர் கமாண்ட் என்பது மரைன் டைம் தியேட்டர் கமாண்ட் ஆக இருக்கும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதன்படி கடற்படை தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளும் இதன் கீழ் கொண்டுவரப்படும். நாட்டின் ஒட்டுமொத்தக் கடல் பகுதியும் இந்த கமாண்டின் கீழ் வந்துவிடும். இதனை 2022-ம் ஆண்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தார் பிபின் ராவத்.
இதுபோலவே ஏரோ ஸ்பேஸ் கமாண்ட், சைபர் கமாண்ட் ஆகியவையும் அமைக்கும் திட்டங்களையும் கவனித்து வந்தார். ஏரோ ஸ்பேஸ் கமாண்ட்டின் கீழ் விமானப்படை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் கொண்டு வரப்படும். சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காகவே சைபர் கமாண்ட் உருவாக்கப்படுகிறது. இந்த கமாண்ட்களையும் உருவாக்கும் நடவடிக்கையிலும் பிபின் ராவத் ஈடுபட்டு வந்தார்.
இந்திய ராணுவத்தில் தற்போது என்ன நடைமுறை உள்ளது?
நமது ராணுவத்தில் தற்போது மூன்று படைப் பிரிவுகளும் தனித்தனியாக இருக்கும். எடுத்துக்காட்டாக தரைப்படை என்றால் அதில் வடக்கு, தெற்கு, மேற்கு என 7 கமாண்ட்கள் இருக்கும். இந்த கமாண்ட்கள் தரைப்படையை மட்டுமே ஒருங்கிணைப்பதாக இருக்கும்.
இதுபோலவே விமானப் படையிலும் 7 கமாண்ட்கள் உள்ளன. கப்பல் படையில் 3 கமாண்ட்கள் உள்ளன. இப்போது மூன்று படைகளும் தனித்தனியாக இயங்குகின்றன. ஆனால், தியேட்டர் கமாண்ட் முறை வந்தால் விமானப்படை மற்றும் கப்பல் படையை ஒருங்கிணைத்துச் செயலாற்ற முடியும்.
அதுபோலவே ராணுவத்திற்கான ஆயுதங்களை வாங்குவதற்கான நடைமுறையை ஒருங்கிணைத்துச் செயலாற்றவும் பிபின் ராவத் நடவடிக்கை எடுத்து வந்தார். இப்போது ராணுவத்தின் 3 பிரிவுகளும் தனித்தனியாகத் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை வாங்குகின்றன.
இதனை மாற்றி ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களை ஒருங்கிணைத்துக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளையும் பிபின் ராவத் ஏற்படுத்தினார். அதற்காக ஒருங்கிணைந்த ஆயுதக் கொள்முதல் திட்டம் உருவாக்கப்பட்டது.
எடுத்துக்காட்டாக ஆளில்லா விமானம் எனப்படும் ட்ரோன்கள் தற்போது ராணுவத்தின் 3 படைப் பிரிவுகளுக்குமே தேவைப்படுகிறது. தற்போது அது தனித்தனியாகக் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், இவற்றை ஒருங்கிணைத்துக் கொள்முதல் செய்வதால் தேவையை உணர்ந்து செய்ய முடியும்.
இதுமட்டுமின்றி ராணுவத்துக்கான பட்ஜெட் என்பது தனித்தனியாக செலவு செய்யப்படும்போது முன்னுரிமையைப் புரிந்துகொள்வது கடினம். அதற்கு பதிலாக ஒரே பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த முறையில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யும்போது முன்னுரிமையைப் புரிந்து முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைக்காக ஆயுதங்களை வாங்கலாம்.
இந்த மாற்றத்தைச் சரியான முறையில் பிபின் ராவத் செய்து வந்தார். இதுதான் பிபின் ராவத்துக்குக் கொடுக்கப்பட்ட இலக்கு. ராணுவத்தின் 3 பிரிவுகளையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வைப்பதுதான் அவரது பணியாக இருந்தது. அதனை செம்மையாக அவர் செய்து வந்தார்.
இதன் மூலம் 2025-ம் ஆண்டுக்குள் நமது ராணுவத்தில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யும் திட்டத்தைப் பிரதமர் மோடி, பிபின் ராவத்திடம் வழங்கி இருந்தார்.
இதுபோன்ற முக்கியமான பொறுப்பை அவருக்கு மத்திய அரசு கொடுத்ததில் இருந்தே அவரது திறமையை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
இதுமட்டுமல்லாமல் பிபின் ராவத், ராணுவப் பணியில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றினார். இதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களை ஒடுக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். வெளிநாடுகளின் ஊடுருவல்களைத் தடுக்கும் பணியிலும் அவர் இருந்தார். ஜம்மு- காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் பணியாற்றினார். சீன ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல்களைத் தடுத்து நிறுத்தம் பணிகளிலும் ஈடுபட்டார்.
இதுபோல ஒட்டுமொத்த ராணுவப் பணிகள் அனைத்திலுமே அவர் திறம்படச் செயலாற்றினார். அவரது இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது உடலை மட்டும் நாம் இழக்கவில்லை. அவருடன் சேர்ந்து அவர் சேர்த்த அறிவு, திறன், தொடர்பு அனைத்தையும் இழந்து விடுகிறோம்.
ராணுவப் பணியில் அவர் எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருப்பார், பழகியிருப்பார். அவருடன் சேர்ந்து அவரது இந்தத் தனித்திறன்களும் போய்விட்டன. இதனை மனித முதலீடு என்று கூறுவோம். இந்தத் திறன்களைப் பொறுத்தவரையில் ராணுவத்துக்கு பேரிழப்பு தான்.
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலில் பிபின் ராவத்தின் பங்கு என்ன?
துல்லியத் தாக்குதல் நடந்தபோது அவர் ராணுவத் தளபதி அல்ல. அப்போது ராணுவத் துணைத் தளபதியாக மட்டுமே இருந்தார். இருப்பினும் ராணுவத்தில் துணைத் தளபதி என்பது செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணிதான். அந்தவகையில் துல்லியத் தாக்குதலின்போது செயல்பாட்டை அவர் கவனித்துள்ளார்.
சீனா குறித்து பிபின் ராவத்துக்கு என்ன விதமான பார்வை இருந்தது?
சீனா குறித்து தனது பார்வையை பிபின் ராவத் நிகழ்ச்சிகளில் பேசும்போதும், தனிப்பட்ட முறையில் பேசும்போதும் வெளிப்படுத்தியுள்ளார். சீனா நமது நாட்டுக்கு மிகப்பெரிய எதிரி என்றே அவர் கூறி வந்துள்ளார். அதற்கு ஏற்ப நமது ராணுவ பலத்தை அதிகரிப்பது குறித்தும் அவர் ஆலோசித்து வந்தார். லடாக் தாக்குதலின் போது சீன ராணுவத்துக்கு எதிராக இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதில் பிபின் ராவத்துக்கு முக்கியப் பங்கு இருந்தது. இந்த பதிலடி தாக்குதலுக்குப் பிறகுதான் சீனா பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. சீனா எதிர்ப்பு நடவடிக்கைகளைச் சமாளிக்கும் திட்டத்திலும் பிபின் ராவத்தின் பங்கு மகத்தானது.
இந்திய ராணுவத்தில் தற்போது நடந்து வரும் புதிய மாற்றங்கள் என்ன?
ராணுவம் நவீன மயம் என்பது தற்போது தொழில்நுட்பம் சார்ந்துள்ளது. தொழில்நுட்பம் வெகு வேகமாக மாறி வருகிறது. நேற்று இருந்த தொழில்நுட்பம் இன்று இல்லை. புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதற்கு ஏற்பத் தளவாடங்கள் வாங்குவது முக்கியமாக உள்ளது. நமக்கு என்ன தேவை, குறிப்பாக, சீனா, பாகிஸ்தானிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் இதுபோன்றவற்றைக் கவனத்தில் கொண்டு முதல் தேவை எது என்பதைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையில் தளவாடங்கள் வாங்குவது மிக முக்கியமாக உள்ளது. அதற்கு ஏற்ப பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
நமது ராணுவத்தில் இதுவரை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை திட்டமிடல் நடந்து வந்தது. பிபின் ராவத் வந்த பிறகு இதனை 10 ஆண்டுகளுக்கான திட்டமிடலாகக் குறைத்தார். இவ்வாறு திட்டமிட்டால் நவீன ஆயுதங்களை நாம் வைத்திருக்க முடியும்.
இந்தியாவில் பழைய தளவாடங்களைப் பயன்படுத்துவதாகப் பொதுவான ஒரு கருத்து உண்டு. ஆனால், இது தவறனாது. உலகின் எல்லா நாட்டு ராணுவங்களிலுமே 30 சதவீதம் பழைய தளவாடங்கள், 30 சதவீதம் இடைக்கால தளவாடங்கள், மீதமுள்ள 40 சதவீதம் நவீன தளவாடங்கள் என்ற அடிப்படையில்தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சுழற்சிபடிதான் தளவாடங்கள் வாங்கப்படுகின்றன.
இதுபோலவே நமது ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் என்பது ஆண்டுக்காண்டு உயர்த்தப்பட்டாலும் அது பண வீக்கத்தைச் சரி செய்யும் அளவுக்குதான் இருக்கும். இதனால் கேட்கப்படும் பணித்தில் 70 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும். அந்த பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு முன்னுரிமை அடிப்படையில் ராணுவம் இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதன்படி ராணுவத்தின் நடவடிக்கைகள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு இந்திய ராணுவம் அடுத்த 10 ஆண்டுகளில் 250 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்கு செலவிட திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு 25 பில்லியன் என்ற அடிப்படையில் செலவிடும் திட்டம். அதன்படி இந்திய ராணுவம் செயலாற்றி வருகிறது.
இவ்வாறு என்.சி.பிபிந்திரா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT