Published : 09 Dec 2021 03:29 PM
Last Updated : 09 Dec 2021 03:29 PM
தமிழகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த இந்திய விமானப்படைக் குழுவைச் சேர்ந்த ஹெலிகாப்டரை இயக்கியவர்களுள் ஒருவரான ராணுவ விமானி வருண் சிங் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நீலகிரியில் உள்ள குன்னூர் மலைப்பகுதியில் புதன்கிழமை நண்பகல் ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மரத்தில் மோதி கீழே விழுந்து நொறுங்கி தீக்கிரையானது. ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றம் 11 பேர் உயிரிழந்தது நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் இன்று காலை வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முப்படைத் தளபதியின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் உடல்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து சென்னை ரெஜிமென்ட் சென்டருக்கு இன்று கொண்டு வரப்படுகிறது.
இக்கோர விபத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்திய விமானப்படை ராணுவ விமானி வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜ்நாத் சிங் விளக்கம்
உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி, அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு நாடாளுமன்றத்தில் இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் விபத்து குறித்து விளக்கம் அளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''இந்திய விமானப் படைக்குழுவின் குரூப் கேப்டன் வருண் சிங் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
குரூப் கேப்டனின் விதிவிலக்கான துணிச்சலான செயலுக்காக சமீபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த ஒரே இந்திய விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிரார்த்தனை செய்தார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங்கையே என் மனம் நினைத்துக் கொண்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்திக்கிறேன்" என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பிரார்த்தனை
"இந்திய விமானப் படையின் ராணுவ விமானி வருண் சிங்கின் உடல்நிலை மற்றும் விரைவில் குணமடைய காங்கிரஸ் குடும்பம் ஒரு பில்லியன் இந்தியர்களுடன் பிரார்த்தனை செய்கிறது" என்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT