Published : 09 Dec 2021 03:02 PM
Last Updated : 09 Dec 2021 03:02 PM
2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, பிரதமர் மோடி உள்ளிட்ட 59 பேருக்குத் தொடர்பில்லை என விடுவித்தது. இதை எதிர்த்து முன்னாள் எம்.பி. ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
2002-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது.
அப்போது குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாஃப்ரியும் கொல்லப்பட்டார். அதன்பின் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
அந்த சிறப்பு விசாரணைக் குழு 2012-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், அப்போது முதல்வராக இருந்த மோடி, போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் உள்ளிட்ட 64 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை எனத் தெரிவித்து வழக்கை முடித்தது.
எஸ்ஐடியின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், குஜராத் உயர் நீதிமன்றத்திலும் ஜாகியா ஜாஃப்ரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாஃப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாத் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சிடி ரவிகுமார் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் மனுதாரர் ஜாகியா ஜாஃப்ரி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடி வருகிறார். 2018-ம் ஆண்டு இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சிறப்பு விசாரணைக் குழுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார்.
எஸ்ஐடி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கி வாதிடுைகயில், “விசாரணை நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழிமொழிய வேண்டும். இல்லாவிட்டால் ஜாஃப்ரியின் மனுவுக்கு முடிவில்லாமல் போய்விடும். சில சமூக ஆர்வலர்கள் சில காரணங்களுக்காக மனு செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிடுகையில், “சிலர் மீது சாயம் பூசி அவர் செய்த பணிகளை மறைக்கப் பார்க்கிறார்கள். குஜராத்துக்கு எதிரானவர் என சீதல்வாத்தை முத்திரை குத்துகிறார்கள். இது நியாயமற்றது.
இந்த நீதிமன்றத்தின் வரலாற்றில் குறைவான முறை, தருணங்கள் மட்டுமே உங்கள் முன் உள்ளன. இதற்கு முன் பலமுறை இது நடந்துள்ளது. சட்டம் சோதனைக்குள்ளானது. நான் யாரையும் குறிவைக்கவில்லை. நீதிபதிகளுக்குத் தெரியும், கிரிமினல் சட்டப்படி, குற்றங்களைத்தான் அறிய முடியுமே தவிர குற்றவாளிகளைக் கருத்தில் கொள்ளமாட்டோம்.
சிறப்பு விசாரணைக் குழு குற்றம் செய்தவர்களைக் கண்டறிய வேண்டும். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். யாருமே செய்யவில்லை, யாரும் இல்லாமல் இவை நடந்தது என்றால், எப்படி வழக்காக உங்கள் முன் வந்தது? குற்றம் நடந்தது என்பதை நீங்கள் உணர்ந்தால், இந்த விசாரணைக்கு உரிய பொறுப்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதற்கு முகுல் ரோஹத்கி பதில் அளிக்கையில், “குஜராத் கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு தேவைக்கும் அதிகமான விவரங்களை அளித்துவிட்டது. எஸ்ஐடி விசாரணை குறித்து யாருமே குற்றம் சாட்டவில்லை, மனுதாரரைத் தவிர. கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணையை சீதல்வாத் நடத்தி வருகிறார். 20 ஆண்டுகள் முடிந்தபின் வழக்கில் மீண்டும் விசாரணையை மனுதாரர் கோருகிறார். யார் விசாரணையை நடத்துவார்கள், யார் கண்காணிப்பாளர்கள் என எனக்குத் தெரியவில்லை.
உண்மையாகவே இதை நீங்கள் நம்பாவிட்டால் புதிய சிறப்பு விசாரணைக் குழு வர வேண்டும். மற்றொரு விசாரணைக் குழு இருக்கிறது. ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரைத்தான் கூப்பிட வேண்டும். இங்கு இருப்பவர்கள் சிபிஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்” எனத் தெரிவித்தார்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT