Published : 09 Dec 2021 03:06 AM
Last Updated : 09 Dec 2021 03:06 AM

நீலகிரி ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திராவை சேர்ந்த இளம் பாதுகாப்பு அதிகாரி சாய் தேஜா மரணம்

சாய் தேஜா. (அடுத்த படம்) ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம்.

திருப்பதி

தமிழகத்தில் நீலகிரி அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபித் ராவத்தின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியான சாய் தேஜா (27) என்பவரும் உயிரிழந்தார். இவர் ஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டத்தைசேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

நீலகிரி அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத்தின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த சாய் தேஜா(27) எனும் ராணுவ அதிகாரியும்இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாய் தேஜா, ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம், குரபல கோட்டா மண்டலம், எகுவ ரேகுல கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். விவசாய குடும்பத்தில் கடந்த 1994-ல் சாய் தேஜா பிறந்தார். இவரது 2 சகோதர்களும் ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில் இவரும் கடந்த 2013-ல் ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக ‘லான்ஸ் நாயக்’ பதவிக்கு வந்தார். நம்பிக்கைக்குரிய இவர், முப்படை தளபதி பிபின் ராவத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இவரும் உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி, ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

ராணுவ அதிகாரி சாய் தேஜா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தகவல் மதனபள்ளியில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். கடந்த செப்டம்பரில் விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு வந்து சென்ற சாய் தேஜா, மீண்டும் பொங்கல் பண்டிகைக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்குள் இந்த கோர விபத்து நடந்து விட்டதாக கூறி அவரது மனைவி கதறி அழுதது அனைவரின் கண்களையும் குளமாக்கியது. மதனபள்ளிக்கு அவர் உடல் இன்று அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x