Published : 08 Dec 2021 07:04 PM
Last Updated : 08 Dec 2021 07:04 PM
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர், ஒரு உண்மையான தேசபக்தர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
கோவை சூளூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக இன்று காலை ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.
இந்த ஹெலிகாப்டர்தான் குன்னுர் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 5 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.
சம்பவ இடத்தில் நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி. ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியினை விரைவுப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பின்னர் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ராணுவ அதிகாரிகள் 13 பேர் உயிரிழந்ததாக பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் ஓருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ஜியின் அகால மரணம் குறித்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தாய்நாட்டிற்கான அவரது நாற்பது ஆண்டுகளாக தன்னலமற்ற சேவை ஒப்பிட முடியாத வீரம் குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.
ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிர் இழந்தது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் கடமையைச் செய்யும்போது இறந்த ஒவ்வொருவருக்கும் சக குடிமக்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் ‘‘தமிழகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை இழந்ததால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் மிகுந்த சிரத்தையுடன் இந்தியாவிற்கு சேவை செய்தனர். என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன.
ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர். ஒரு உண்மையான தேசபக்தரான அவர், நமது ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு எந்திரங்களை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்தார். முக்கிய விஷயங்களில் அவரது நுண்ணறிவு மற்றும் முன்னோக்கிய சிந்தனை பலரிடமும் இல்லாத ஒன்று. அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓம் சாந்தி’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT