Published : 08 Dec 2021 03:07 PM
Last Updated : 08 Dec 2021 03:07 PM

பணமதிப்பிழப்பு, பொதுசொத்துக்கள் விற்பனை; தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்கிறது மோடி அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்ற காட்சி | படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

முதலில் பணமதிப்பிழப்பை கொண்டுவந்த மோடி அரசு, அரசு சொத்துக்களை விற்பனை செய்து 70 ஆண்டுகளாக கட்டமைத்த தேசத்தின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் கூட்ட அரங்கில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் எம்.பி.க்கள், ராகுல் காந்தி, தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது எம்.பி.க்கள் மத்தியில் சோனியா காந்தி பேசியதாவது:

நாகாலாந்தில் 14 அப்பாவி இளைஞர்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டதற்கு பாதிக்கப்பட்டகுடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு விரைவாக நீதிவழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் இருந்து 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முடிவு என்பது மிகவும் அதிர்ச்சிக்குரியது மோசமான செயல், மீதமுள்ள குளிர்காலக்கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்தது என்பது முன் எப்போதும் இல்லாத நடவடிக்கையாகும்.

அரசியலமைப்புச்சட்ட விதிகள், அவை நடத்தை விதிகளுக்கு முரணாக 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை, அதுகுறித்து விவாதிக்கப்படவும் இல்லை. இதனால் தொடர்ந்து நாட்டின் எல்லைகளில் சவால்களை இந்தியா சந்தித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் எல்லைப் பிரச்சினை குறித்து பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால்தான், கூட்டாகச் சேர்ந்து பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

ஆனால், கடினமான கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. ஆனால் தெளிவும், விளக்கம் பெறுவதும் எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால், இதுகுறித்து விவாதிக்க மோடி அரசு நேரம் ஒதுக்குவதில்லை. நம்முடைய அண்டை நாடுகளுடன் உறவு, எல்லைப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தவும், ஆலோசிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசு கடைசியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. ஆனால், ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் எந்தவிதமான விவாதங்களும் இன்றி நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்களை நிறைவேற்றியது மத்தியஅரசு. விவசாயிகளின் ஒற்றுமை, அஹிம்சை போராட்டம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவை அகங்காரம் பிடித்த மோடி அரசாங்கத்தை பணியவைத்தது. விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியை வணங்குகிறேன்.

கடந்த 12 மாதங்களில் 700 விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் குறிப்பாக குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க விவசாயிகளுக்கு துணைநிற்போம். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவும் போராடுவோம்.

விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால், மோடி அரசு உணர்வற்று, பிரச்சினையின் தீவிரம் அறியாமல் இருக்கிறது. மக்களின் துயரங்களை கவனிக்காததுபோல் மத்தியஅரசு இருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையைக் குறைந்தது ஒட்டுமொத்தமாகப் போதாதது.

தேவையில்லாத விஸ்டா திட்டத்துக்கு மத்திய அரசு மக்களின் பணத்தை செலவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் தேசத்தின் சொத்துக்களான வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே மற்றும் விமானநிலையங்களை விற்பனை செய்து வருகிறது மத்திய அரசு.

முதலில் நாட்டில் பணமதிப்பிழப்பை 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்து பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீரழித்தார். அதன்பின் தொடர்ந்து அழிவுப்பாதையில் சென்று கடந்த 70 ஆண்டுகளாக பொருளாதார, சமூக கண்ணோட்டத்தை மனதில் வைத்து உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை விற்று பொருளாதாரத்தை அழிக்கிறார்.

பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது என மத்திய அ ரசு கூறுகிறது. நான் கேட்கிறேன், யாருடைய பொருளாதாரம் மீட்சி அடைகிறது. லட்சக்கணக்காண மக்கள் வாழ்க்கையை இழந்தவர்களின் பொருளாதாரம் மீளவில்லை. கரோனா தொற்று, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வர்த்தகம் அழித்ததே அவைகளும் மீளவில்லை.

பெரிய நிறுவனங்கள்தான் லாபம் அடைகின்றன, பங்குச்சந்தையில் புதிய உச்சத்துக்கு சென்றன. இவையெல்லாம் பொருளாதார மீட்சி அல்ல. உழைப்பை செலவழிப்பதால்தான் லாபம் இருக்கிறதென்றால் இந்த லாபங்களின் சமூக மதிப்பு என்ன

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் இரு டோஸ்கள் செலுத்துவதை முழுமையாக தேசம் எட்டவில்லை. தற்போதுள்ள தடுப்பூசி செலுத்தும் அளவில் 4 மடங்கு அதிகரிக்க வேண்டும். ஏற்கெனவே வந்த கரோனா அலைகள் மூலம் மத்திய அரசு பாடங்கள் கற்றிருக்கும் அதற்கு ஏற்றார்போல் புதிய உருமாற்ற வைரஸை எதிர்க்கத் தயாராக வேண்டும்

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x