Published : 08 Dec 2021 12:46 PM
Last Updated : 08 Dec 2021 12:46 PM
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபோது கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் 321 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் முறையை ஒழித்துவிட்டாலும் கடந்த ஆண்டுகளில் நாட்டில் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடக்கின்றன.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் முறையில் எத்தனைபேர் உயிரிழந்துள்ளார்கள் என பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. கிரிஷ் சந்திரா, தெலங்கு தேசம் கட்சியின் எம்.பி. கேசினேனி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு மக்களவையில் சமூக நீதிதித்துறை அமைச்சர் வீரேந்திர குமார் எழுத்துப்பூர்வமாக நேற்று பதில் அளித்தார்.
அதில் அவர் கூறுகையில் “ நாட்டில் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடை செய்வது, கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்வதில் இருக்கும் இலக்குகளை மத்திய அரசு அடைய முடியும். கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகள், திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யத்தடை, மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013-ன் கீழ், மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகலை சுத்தம் செய்வது என்பது, மனிதர்கள் சுத்தம் செய்வது, கழிவுகளை சுமத்தல், அகற்றுதல், எந்தவிதத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே கையாளும்விதமாகும்.
இதைத் தடை செய்யும் முயற்சியில் மனிதர்கள் கழிவுகளை அள்ளும் சம்பவங்களைப்பார்த்தால், அல்லது உலர்கழிப்பறைகள் இருப்பதைப் பார்த்தால் புகார் அளிக்க கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி தனியாக ஒரு செயலி உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை மனிதர்களின் கழிவை மனிதர்கள் அள்ளுதல், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தலில் மனிதர்கள் ஈடுபடவில்லை” எனத் தெரிவித்தார்
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் எழுப்பிய கேள்விக்கு சமூக நீதித்துறை இணைஅமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் அளிக்கையில் “ கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது நடந்த விபத்துகளில் 321 தொழிலாளர்கள் உயிரழந்துள்ளனர். ஆனால், மனிதக்கழிவுகளை அகற்றியபோது உயிரிழந்ததாக எந்த புகாரும் இல்லை.
கழிவுநீர் தொட்டிகள், வழிகாட்டி விதிகளின்படி முறைப்படி கட்டவில்லை என்பதால்தான் இந்த விபத்துகள் நடந்துள்ளன. அதிகபட்சமாக 2019-ம் ஆண்டில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். 2020ம் ஆண்டில் 19 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது” எனத் தெரிவி்த்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT