

நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக நேற்று (திங்கள்கிழமை) நடந்த நீண்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு The National Technical Advisory Group on Immunization (NTAGI) நேற்று கூடியது.
இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பூசித் திட்டத்தின் செயல்பாடு, கூடுதல் டோஸ், குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டாததால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இந்தியாவில் தற்போது குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், எந்த முடிவும் எட்டப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில், "பூஸ்டர் டோஸ் குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவே இல்லை. மாறாக கூடுதல் டோஸ் பற்றி ஆலோசிக்கப்பட்டது. பூஸ்டர் டோஸ் என்பது குறிப்பிட்ட கால இடைவெளியில் அளிக்கப்படும் தடுப்பூசி. ஆனால், கூடுதல் டோஸ் என்பது நோய் எதிர்ப்பாற்றலில் சிக்கல் உடையோர், தொற்று ஏற்பட அதிக வாய்ப்புடையவர்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி டோஸ். இரண்டு டோஸ்களால் போதியளவில் உடலில் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்த முடியாவிட்டால் மட்டுமே மூன்றாவது டோஸ் செலுத்தப்படும். ஆகையால், நேற்றைய கூட்டத்தில் கூடுதல் டோஸ், குழந்தைகளுக்கான தடுப்பூசி பற்றி மட்டுமே ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் நாடாளுமன்றத்தில் பேசும்போது இப்போதைக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை என்றே கூறியிருந்தார்.
ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் அடார் பூனாவாலா அண்மையில் அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். அதில் தங்கள் நிறுவனத்தின் கோவிஷீல்டு மருந்தை 40 வயதுக்கு மேற்பட்ட, ஹை ரிஸ்க் மக்களுக்கு பூஸ்டர் டோஸாக செலுத்த அனுமதிக்குமாறு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.