Published : 05 Dec 2021 08:22 AM
Last Updated : 05 Dec 2021 08:22 AM
வெளிநாடுகளில் இருந்து மும்பை விமானநிலையம் வந்தவர்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மும்பை வந்தவர்களில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரி்த்துள்ளது. எச்சரிக்கைப் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த அடிப்படையில் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவிலிருந்து துபாய் வழியாக டெல்லி வந்து மும்பைக்கு வந்த கப்பல் பொறியாளர் ஒருவர் ஒமைக்ரான் வைரஸால் பாதி்கப்பட்டது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இளைஞர் கல்யான் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 2,794 பேருக்கு பரிசோதனை செய்துள்ளோம். அதில் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் எச்சரிக்கைப் பட்டியல் நாடுகளில் இருந்து வந்தவர்கள். இவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பயணிகளுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெள்ளிக்கிழமை வரை 3,760 பயணிகள் எச்சரிக்கைப் பட்டியலி்ல் உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT