Published : 04 Dec 2021 08:56 AM
Last Updated : 04 Dec 2021 08:56 AM
நீதிமன்றங்கள், காவல்நிலையங்கள் மற்றும் கைதிகள் மீதான தனிநபர் மசோதா மக்களவையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றை ஒரே நாளில் விழுப்புரம் எம்.பி. டி.ரவிகுமார் தாக்கல் செய்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் மக்களவையில் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமைகளில் தனிநபர் மசோதா எம்.பி.,க்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவற்றை அறிமுகப்படுத்துவதில் பெரும்பாலான எம்.பி.,க்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று தனிநபர் மசோதாக்களை விழுப்புரம் எம்.பி., டி.ரவிகுமார் அறிமுகம் செய்துள்ளார்.
இதில் முக்கியமாக, நாட்டின் நீதிமன்றங்கள் மீதான மசோதா இருந்தது. இது, உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் தாங்களே ஒரு தரப்பாக இருந்து வழக்கு தொடுப்பதற்கு ஏதுவாக உள்ள நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தைத் திருத்தம் செய்வதற்கான மசோதாவாக இருந்தது.
இரண்டாவதாக, நாட்டின் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு ஊறு நேர்ந்தால் காவல் நிலைய அதிகாரியே பொறுப்பு என்னும் சட்டத் திருத்தத்துக்கான மசோதாவாகவும் இருந்தது.
இதன்மூலம், காவல்நிலையங்களின் விசாரணைக் கைதிகள் இறப்பு முடிவிற்கு வரும் வாய்பாக அமையும் என்பது விழுப்புரம் மக்களவை தொகுதி எம்.பியுமான ரவிகுமாரின் நம்பிக்கையாக உள்ளது.
கடைசியாக, விசாரணைக் கைதிகளுக்கும், 2 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெற்ற கைதிகளுக்கும் வாக்குரிமையை மறுக்காதிருக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரும் மசோதாவையும் எம்.பி ரவிகுமார் அறிமுகம் செய்துள்ளார்.
அடுத்து வரும் நாட்களில் இந்த மூன்று மசோதாக்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா? என்பது தெரியவரும். இதுபோல், பல முக்கியமான தனிநபர் மசோதாக்கள் விவாதத்திற்கு வருவதும் பிறகு, அவை அமலாவதும் அரிதாகவே உள்ளன.
திருநங்கைகள் மீது மாநிலங்களவையின் மூத்த திமுக எம்.பி.யான திருச்சி சிவா கடந்த ஆட்சியின் போது அறிமுகப்படுத்திய தனிநபர் மசோதா நிறைவேறி இருந்தது. இது சுமார் 45 வருட இடைவெளிக்கு பின் முதன்முறையாக நிறைவேறிய ஒரு எம்.பியின் தனிநபர் மசோதாவாகவும் பாராட்டப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT