Published : 03 Dec 2021 07:57 PM
Last Updated : 03 Dec 2021 07:57 PM

கங்கணா கார் வழிமறிப்பு: போராடிய பெண்களைக் கிண்டல் செய்ததற்கு மன்னிப்பு கேட்டபிறகு வழிவிட்ட விவசாயிகள்

காரில் இருந்தபடி போராட்டப் பெண்களிடம் மன்னிப்பு கேட்ட கங்கணா ரணாவத் | படம்: ஏஎன்ஐ.

பெண் போராட்டக்காரர்களைக் கிண்டல் செய்ததால் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தின் கார் பஞ்சாப் கிராமத்தில் வழிமறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி எல்லைகளில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக மழையையும், வெயிலையும், பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் கலந்துகொண்டனர். கடந்த மாதம் மத்திய அரசு தனது புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது.

கங்கணாவின் சர்ச்சை ட்வீட்கள்

போராட்டம் தீவிரமடைந்த காலங்களில் சில மாதங்களுக்கு முன்பு, கங்கணா போராட்டக்காரர்களை ''காலிஸ்தான்கள்'' என்று அழைத்து ட்வீட் செய்திருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பேரணியில் பங்கேற்ற ஒரு வயதான பெண்மணியை ஷாஹீன் பாக் போராட்டங்களில் பிரபலமானவர் என்று தவறாகப் புரிந்துகொண்டு, அவரை ''நூறு ரூபாய் கிடைக்கும் என்பதற்காகப் போராட வந்தவர்'' என்று கங்கணா கிண்டல் ட்வீட் செய்திருந்தது வலைதளத்தில் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் தனது ட்வீட்டை நீக்கினார்.

இன்று (வெள்ளிக்கிழமை), தனது சகோதரியின் பிறந்த நாளைத் தனது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் இருந்து ரோபர்-மணாலி நெடுஞ்சாலையில் அவர் வந்து கொண்டிருந்தபோது விவசாயிகள் அவரது ட்வீட் கருத்துகளுக்காகவே வழிமறித்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

காரை வழிமறிக்க திரண்ட விவசாயப் போராட்டக்காரர்கள்

காரை கெரோ செய்த விவசாயிகள்

இமாச்சலப் பிரதேசத்திலிருந்து காரில் வந்துகொண்டிருக்கும்போது, சத்தீஸ்கர் மாநிலத்தில் நுழைந்தது. அப்போது பிலாஸ்பூரிலிருந்து அவரை பாரதிய கிசான் யூனியனின் உறுப்பினர்கள் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் பஞ்சாப்பின் புங்கா சாஹிப்பை அடைந்தபோது, ஏராளமான பெண்கள் உட்பட எதிர்ப்பாளர்கள் அவரது காரின் முன் சாலையை மறித்து அமர்ந்தனர். கிராத்பூர் அருகே விவசாயிகளால் சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்டு கெரோ செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தின்போது, கிட்டத்தட்ட ஒரு மணி நேர கெரோவிற்குப் பிறகு அவர் போராட்டக்காரர்களைச் சந்திக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இரண்டு பெண்கள் அவரது காருக்கு அருகில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அப்பெண்கள் டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பெண்களிடம் மன்னிப்பு கேட்ட கங்கணா, பின்னர், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தான் எதுவும் பேசவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். இதையடுத்து காரில் இருந்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் கட்டிப்பிடித்தார்.

போலீஸார் சமாதானம்

உடனே பலத்த போலீஸ் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இதைத் தொடர்ந்து, நடிகையின் பதிலில் திருப்தி அடைந்ததாகப் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். மேலும் அவர் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டார்.

விவசாயிகள் மற்றும் பெண் போராட்டக்காரர்களைப் பற்றித் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷாஹீன் பாக் போராட்டம் நடத்திய பெண்களைக் குறிப்பிடுவதாகவும் அவர் பெண் எதிர்ப்பாளர்களிடம் கெஞ்சுவதையும் மன்னிப்பு கேட்பதையும் இது தொடர்பாக அவர் வெளியாகியுள்ள வீடியோவில் காணமுடிகிறது.

சங்கத்தின் தலைவர் சேதி ஷர்மா கூறுகையில், ''டெல்லி எல்லையில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுக்கு எதிராக கங்கணா தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராக அவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். மேலும், அவர் பெண்களிடம் மன்னிப்பு கேட்காத வரை அவர்கள் தனது கெரோவை விலக்கிக் கொள்ளவில்லை'' என்றார்.

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கங்கணா இதுகுறித்த வீடியோக்களைப் பதிவேற்றம் செய்துள்ளார். பாதுகாப்பு இல்லாவிட்டால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பேன் என்று பதிவில் கூறியுள்ளார்.

கங்கணா ரணாவத், தன்னைப் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றதற்காக பஞ்சாப் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார். தான் கார் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் தனது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்தார்.

இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் விவேக் ஷீல் சோனி கூறுகையில், ''கங்கணா ரணாவத் வருகை குறித்து மாவட்டக் காவல்துறைக்கு எந்த முன் தகவலும் இல்லை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x