Published : 03 Dec 2021 02:59 PM
Last Updated : 03 Dec 2021 02:59 PM

கரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் அரசியலாக்கப்பட்டது: நாடாளுமன்றத்தில் மன்சுக் மாண்டவியா பேச்சு

சுகாதாரத்துறை அமைச்சர்  மன்சூக் மாண்ட்வியா

புதுடெல்லி

கரோனா இரண்டாவது அலையில் ஆக்ஸிஜன் அரசியலாக்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்தார்.

மழைக்கால கூட்டத்தொடரின் போது, ​​கோவிட் 19 இன் இரண்டாவது அலையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்ததை அடுத்து நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, நாட்டில் ஆக்ஸிஜனின் தேவை மற்றும் விநியோகத்தை அணுகவும் பரிந்துரைக்கவும் தேசிய பணிக்குழுவை (NTF) அமைக்க உத்தரவிட்டது.

தற்போது, கடந்த நவம்பர் 29 தொடங்கி குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் கோவிட் 19 இன் இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட இறப்புகள் குறித்து காங்கிரஸ் எம்பி பாலுபாவ் தோர்கர் மீண்டும் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

காங்கிரஸ் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

கோவிட் -19 அல்லது ஆக்ஸிஜன் காரணமாக ஏற்படும் இறப்புகள் தொடர்பான எந்த எண்ணையும் மறைக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி முதல்வர்களை கேட்டுக் கொண்டார்.

ஆனால், கோவிட் 19 இரண்டாது அலையில் ஆக்சிஜன் ஒரு பிரச்சினையாக எழுப்பப்பட்டு அரசியல் ஆக்கப்பட்டது. அப்போது ஆக்ஸிஜன் தேவைக்காக சில மாநிலங்கள் நீதிமன்றங்கள் வரை சென்றன. தங்கள் மாநிலங்களில் ஆக்சிஜன் தேவைக்கான சாதகமான உத்தரவுகளைப் பெற்று தேவையை பூர்த்தி செய்துகொண்டன.

மத்திய அரசைப் பொறுத்தவரை அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் இன்றி ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்களைக் கேட்டு கடிதம் எழுதினோம். 19 மாநிலங்கள் பதிலளித்தன, பஞ்சாபில் மட்டுமே ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நான்கு சந்தேகத்திற்கிடமான இறப்புகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x