Published : 03 Dec 2021 02:11 PM
Last Updated : 03 Dec 2021 02:11 PM

காங்கிரஸ் இல்லாத எதிரணி? - பிரசாந்த் கிஷோர் திட்டத்தால் மோதல்

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சி அல்லாமல் பாஜகவுக்கு எதிரான அணியை கட்டமைக்கும் முயற்சியில் திரிணமூல் காங்கிரஸ் இறங்கியுள்ள நிலையில் இதனை பிரசாந்த் கிஷோர் முன்னெடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ்- பிரசாந்த கிஷோர் இடையே மோதல் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்
கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம் செய்து பணியாற்றி வருகிறார். இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரைக் கட்சியில் சேர்ப்பது நல்ல பலன் அளிக்கும் என்று கட்சிக்குள் ஒருதரப்பினர் தெரிவித்தனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யாமல் உழைக்காமல், எதிரணியிலிருந்து வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிராசாந்த் கிஷோர் வருவதை சோனியா காந்திக்குக் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்த ஜி 23 மூத்த தலைவர்கள் பலர் விரும்பவில்லை.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோரின் யோசனைகள் தொடர்பாக மூத்த தலைவர்களிடம் ஆலோசனை கேட்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தார்.

இந்த குழுவில் ஏ.கே. ஆண்டனி, அம்பிகா சோனி மற்றும் கே.சி. வேணுகோபால் அடங்கிய அந்த குழுவினர், கட்சியில் சேர்வதற்கு பிரசாந்த் கிஷோர் விதித்த நிபந்தனைகளை கடுமையாக எதிர்த்தாக கூறப்படுகிறது.

இதனால் காங்கிரஸ் கட்சி செயல்படும் விதம் குறித்தும், காலத்துக்கு ஏற்ப மாறாதது குறித்தும் கிஷோர் விமர்சிக்க தொடங்கினார்.

லக்கிம்பூர்கெரி விவகாரத்தை வைத்து பெரிய அளவில் உ.பி.யில் அரசியல் நடவடிக்கைகளை பிரியங்கா காந்தி முடுக்கி விட்ட நிலையில் இதனை பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார். “ லக்கிம்பூர்கெரி விவகாரத்தை அடிப்படையாக வைத்து மிகப்பழமையான கட்சிக்கு உடனடியான, விரைவான புத்துயிர் கிடைக்கும் என எதிர்பார்த்த சிலருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைக்கும். பழமையான கட்சியில் ஆழமாக வேர்விட்ட பிரச்சினைகளுக்கும், கட்டமைப்பு பலவீனத்துக்கும் துரதிர்ஷ்டமாக விரைவான தீர்வு ஏதும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி கோவா முன்னாள் முதல்வர் லூசின்ஹோ பெலிரியோ, மேகலாயா எதிர்க்கட்சித் தலைவர் முகுல் சங்மா உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதிலும் பிரசாந்த் கிஷோரின் பங்கு இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், பிஹார் காங்கிரஸைச் சேர்ந்த கீர்த்தி ஆசாத், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பவான் வர்மா, ஹரியாணா அரசியல் தலைவர் அசோக் தன்வர் ஆகியோர் கடந்த இரு நாட்களுக்கு முன் திரிணமூல் காங்கிஸில் சேர்ந்தனர்.

இந்தநிலையில் மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை ஏற்பது என்பது காங்கிரஸ் கட்சி அல்லது எந்த ஒரு தனிநபரின் முடியுரிமை அல்ல என தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரசாந்த் தனது ட்வீட்டில், "வலுவான எதிரணி அமைவதற்கு காங்கிரஸின் யோசனை மிகவும் முக்கியமானது. ஆனால் அந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையில் தான் கூட்டணி என்பது அக்கட்சியின் முடியுரிமை அல்ல. அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் 90% தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிக்கு தலைமை ஜனநாயக முறைப்படி அமைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மல்லிகார்ஜூன கார்கே, ஆதி ரஞ்சன் சவுத்திர உள்ளிட்டோர் கடுமையாக எதிர் வினையாற்றியுள்ளனர்.

இதுபற்றி மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற, முற்போகக்கு, ஜனநாயக அரசியல் கட்சிகளிடையே பரவலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு நிலவுவது அவசியம். அது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். இதற்கான தேசிய கூட்டு முயற்சியின் மைய தூணாக காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் முதலில் ராகுல் காந்தியை முன் வைத்து ஒரு திட்டத்தை உருவாக்க விரும்பினார், ஆனால் இப்போது அவர் இல்லாத செயல் திட்டத்தை விரும்புகிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x