Published : 03 Dec 2021 01:43 PM
Last Updated : 03 Dec 2021 01:43 PM
கர்நாடகாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுக் கண்டறியப்பட்ட இருவர் மூலமும் முதல் நிலை, 2-ம் நிலைத் தொடர்புள்ள 500 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல் முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டவுன் அந்நாட்டிலிருந்து வருவோருக்குப் பயணக் கட்டுப்பாடுகளைப் பல்வேறு நாடுகளும் விதிக்கத் தொடங்கின. இந்தியாவிலும் எச்சரிக்கைப் பட்டியல் என அழைக்கப்படும் ஒமைக்ரான் பாதிப்பு நாடுகளில் இருந்து வருவோருக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
அவர்களுக்குக் கட்டாய பிசிஆர் பரிசோதனை, அதில் நெகட்டிவ் வந்தால், வீட்டில் 7 நாட்கள் தனிமைக்குப் பின் 8-வது நாள் பிசிஆர் பரிசோதனை, அதிலும் நெகட்டிவ் வர வேண்டும் எனக் கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ம் நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் 46 வயதான மருத்துவர். மற்றொருவர் 66 வயதானவர்.
இதில் 66 வயதான முதியவர் ஏற்கெனவே இரு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்கள். தென் ஆப்பிரிக்காவில் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன் கர்நாடகா வந்தார். பெங்களூரு விமான நிலையத்தில் அவருக்கு மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானது.
ஆனால், அறிகுறி இல்லாத தொற்று என்பதால், தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அந்த முதியவர் தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் வந்தது. அந்தச் சான்றிதழுடன் கடந்த மாதம் 27-ம் தேதி நள்ளிரவில் வாடகை டாக்ஸி மூலம் விமான நிலையம் வந்து பெங்களுரூவில் இருந்து துபாய்க்குச் சென்றுவிட்டார். இந்த முதியவர் மூலம் 24 பேர் நேரடியாகவும், 240 பேர் செகண்டரியாகத் தொடர்புள்ளவர்கள்.
2-வதாக 46 வயதானவருக்கு லேசான காய்ச்சல், உடல்வலி மட்டும் காணப்படுகிறது. இந்த அறிகுறிகளுடன் கடந்த மாதம் 22 மற்றும் 24-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 27-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இந்த நபர் மூலம் 13 பேர் நேரடியாகத் தொடர்புடையவர்கள், 205 பேர் செகண்டரியாகத் தொடர்புடையவர்கள் என ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஒமைக்ரான் வைரஸ், 45 முதல் 52 அமினோ ஆச்டி மாற்றங்களை மரபணு மூலம் கொண்டுள்ளது. அதனுடைய ஸ்பைக் புரதத்தில் 26 முதல் 32 உருமாற்றங்களைப் பெற்றுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் மூலம் அதனைக் கண்டறியலாம். ஆனால், மரபணு வரிசைப்படுத்த தனி ஆய்வகம் தேவை. இந்த வைரஸ் மூலம் பரவல் வேகம் அதிகமாக இருக்கும், கடந்த கால வைரஸை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும” எனத் தெரிவித்துள்ளது.
முதல்கட்ட ஆய்வுகள், புள்ளிவிவரங்கள்படி, தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT