Last Updated : 03 Dec, 2021 12:25 PM

18  

Published : 03 Dec 2021 12:25 PM
Last Updated : 03 Dec 2021 12:25 PM

பாஜகவைத் தோற்கடிப்பது காங்கிரஸின் எண்ணம்; ஆனால், சிலர் பாஜகவுக்கு உதவுகிறார்கள்: மம்தா மீது கார்கே பாய்ச்சல்

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி | கோப்புப் படம்.

புதுடெல்லி

பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் நோக்கமாக, இலக்காக வைத்திருக்கிறது. ஆனால், சிலர் காங்கிரஸை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு பாஜகவுக்கு உதவுகிறார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மறைமுகமாக மம்தா பானர்ஜியை சாடியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்துக்கு 3 நாட்கள் பயணமாகச் சென்றிருந்தார். அங்கு சிவசேனா கட்சித் தலைவரும், உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரேவையும், மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின் இருவரும் கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அப்போது மம்தா பானர்ஜி கூறுகையில், “நானும், மற்ற கட்சியினருடன் சேர்ந்து பாஜகவுக்கு எதிராகப் போரிடத் தயாராக இருக்கிறேன். ஆனால், சிலர் விருப்பமில்லாமல் இருக்கும்போது, என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நாட்டில் அதிகரித்துவரும் பாசிஸத்துக்கு எதிராக வலிமையான மாற்று தேவை என்று நான் நம்புகிறேன்.

நான் மட்டும் தனியாக இதைச் செய்ய முடியாது. யாரெல்லாம் வலிமையாக இருக்கிறார்களோ, எங்கிருந்தாலும் இதைச் செய்யலாம். சரத் பவார் ஜி மூத்த தலைவர். அவருடன் நான் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அதனால்தான் அவருடன் சில விஷயங்கள் குறித்து ஆலோசித்தேன்” எனத் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது, சரத் பவார் ஏற்பாரா என்று நிருபர்கள் கேட்டபோது, அதற்கு மம்தா பானர்ஜி, “எந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பற்றிப் பேசுகிறீர்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பது இல்லை” எனத் தெரிவித்தார்

மம்தா பானர்ஜியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எங்குமே இல்லை என்று மம்தா பானர்ஜி கூறியது முழுமையான தவறு. அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தியைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததும் தவறு. ராகுல் காந்தி எங்குமே காணப்படவில்லை என்று மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டு தவறானது.

மக்களைப் பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் காங்கிரஸ் கட்சி எழுப்புகிறது, ஒவ்வொரு இடத்திலும் போராடுகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். ஆனால், காங்கிரஸை எதிர்க்கிறேன் என நினைத்து சிலர் பாஜகவுக்கு உதவுகிறார்கள். காங்கிரஸ் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. பல மாநிலங்களில் எதிர்க்கட்சியாக இருக்கிறது.

பல்வேறு சமூக அரசியல் விவகாரங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை இணைத்துக்கொள்ளவே நாங்கள் முயல்கிறோம். எதிர்க்கட்சிகள் பிரிந்துவிடக் கூடாது, பிளவுபடக் கூடாது. பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும்'' என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x