Published : 03 Dec 2021 07:53 AM
Last Updated : 03 Dec 2021 07:53 AM

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி : இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு அறிவுறுத்தல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி


இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு (INSACOG) அறிவுறுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கடந்த மாதம் 24ம் தேதி கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கெனவே இருக்கும் டெல்டா வைரஸைவிட பரவலில் வீரியம் மிகுந்தது, தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் எதிர்ப்புச்சக்தியை அழிக்கக்கூடியது, அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.

இதையடுத்து, ஒமைக்ரான் பாதிப்பு உள்ள தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரோன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. இந்த இருவரோடும் தொடர்பில் இருந்தவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு ஆய்வகங்கள் ஆகியவை இணைந்து 40 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அவசியம் என அறிவுறுத்தியுள்ளன. இரு அமைப்புகளுமே ஆலோசனை வழங்கும் அமைப்புகள் இல்லை என்றபோதிலும் சூழலைக் கருத்தில் கொண்டு இரு அரசு அமைப்புகளும் தாமாக முன்வந்து இந்தக் கருத்தைத் முதல்முறையாகத் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் உள்ள தடுப்பூசி செலுத்தாத மக்கள் அனைவருமே பெரும் இடர்பாடுகளைச் சந்திக்கக் கூடியவர்கள். இவர்களைக் கருத்தில் கொள்ளும் அதேநேரத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசிக்கலாம். முதலில் அதிகமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ள பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே உடலில் குறைந்த அளவு நோய் எதிர்ப்புச்சக்தி இருப்பவர்களுக்கு ஒமைக்ரானால் பாதிப்பு அதிகம். அதேநேரம் தடுப்பூசி செலுத்தியவர்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியை முழுமையாக ஒமைக்ரான் அழித்துவிடும் என்பதற்கு சான்று இல்லை. தடுப்பூசி செலுத்தியிருந்தால் நோய் தீவிரத்தன்மை குறையும்.

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கிளினிக்கல் பரிசோதனையில் கிடைத்த முடிவுகளைவிட, தடுப்பூசி செலுத்தியபின் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி காலப்போக்கில் குறைந்துவிடுகிறது, மீண்டும் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பரிதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்ட்டியூட் கடந்த வாரம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், கோவிஷீல்ட் இரு டோஸ் செலுத்தியவர்களுக்கு அறிகுறியுள்ள கரோனாவுக்கு எதிராக 63% மட்டுமே செயல்படுகிறது, மிதமான மற்றும் தீவிரத் தொற்றுக்கு எதிாக 85 % செயல்படுகிறது எனத் தெரிவித்தது. ஆனால் கோவாக்சின் ஆய்வு முடிவுகள் கிடைக்கவில்லை.

சிஎஸ்ஐஆர் மற்றும் ஐஜிஐபி அமைப்பின் இயக்குநர் அனுராக் அக்ரவால் கூறுகையில் “உலக சுகதாார அமைப்பின் பரிந்துரையின்படி முதலில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்குதான் முன்னுரிமை அளிக்க வேண்டும். பூஸ்டர் டோஸ் ஒமைக்ரான் குறித்த ஆதாரங்கள் கிடைத்தபின்பரிசீலிக்கலாம்.

இந்திய சார்ஸ்கோவிட் மரபணு கூட்டமைப்பு ஆலோசனைகூறும் அமைப்பல்ல. ஆனால், ஒமைக்ரான் தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியிலிருந்து தப்பிக்கும் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆதலால் பூஸ்டர் தடுப்பூசியு்ம் தேவைப்படலாம். ஒமைக்ரான் தீவிரம் குறித்து அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x